1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (13:34 IST)

ஸ்டெர்லைட்: இந்தியாவில் வேதாந்தாவின் சர்ச்சைக்குரிய 4 திட்டங்கள்

தமிழ்நாடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு பிறகு வேதாந்தா நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பிரிட்டன் நிறுவனமான வேதாந்தா சர்ச்சையில் சிக்குவது முதல்முறையல்ல. கோர்பா விபத்து, நியமகிரி என பலமுறை சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
 
லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் இந்தியாவில் இயங்குகிறது.
 
கோர்பா விபத்து
 
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் அலுமினிய உற்பத்தி நிறுவனத்தை இயக்கி வருகிறது ஸ்டெர்லைட். 2009 ஆம் ஆண்டில் அங்கு கட்டப்பட்டு வந்த பிரமாண்ட புகைக் கூண்டு நொறுங்கி விழுந்ததில் 42 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பால்கோ (பாரத் அலுமினியம் கம்பெனி) வேதாந்தா, சீன நிறுவனம் ஷைன்தோன் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக்‌ஷன் கார்ப்பரேஷன் மற்றும் ஜி.டி.ஜி.எல் ஆகியவற்றிற்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
 
இந்த வழக்கை விசாரிக்க சத்தீஸ்கர் மாநில அரசு, பக்‌ஷி கமிஷனை அமைத்தது. ஆணையமும் தனது விசாரணை அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துவிட்டது. ஆனால் அந்த அறிக்கையை மாநில அரசு பகிரங்கமாக வெளியிடவில்லை.
 
2001 ஆம் ஆண்டில், பால்கோ அரசு நிறுவனம் வேதாந்தாவால் வாங்கப்பட்டதில் இருந்தே சர்ச்சைகள் தொடங்கின.
 
பால்கோ நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் பிற ஆலை உபகரணங்களை (சுத்திகரிப்பு, உலை, உறைவிப்பான்) இந்திய அரசிடமிருந்து 551 கோடி ரூபாய்க்கு வேதாந்தா வாங்கியது.
 
ஆனால் அரசு நிறுவனமான பால்கோவின் மதிப்பு இதைவிட பல மடங்கு அதிகமானது என்று கூறப்பட்டது.
 
பால்கோ அரசு நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிராக அதன் தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு போராட்டங்கள் 60 நாட்கள் வரை நீடித்தது.
 
நியம்கிரி, ஒடிஷா
 
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடங்கப்படவிருந்த பாக்ஸைட் தாது சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள் மக்கள். இந்தியா கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள முக்கியமான வனவிலங்கு வாழ்விடமாக கருதப்படும் நியமகிரி மலைப்பகுதிகளில் பாக்ஸைட் எடுப்பது சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் என்று தொடரப்பட்ட இந்த வழக்கை, டோங்காரியா கோன்ட் பழங்குடியினர், தங்கள் கிராம பஞ்சாயத்தில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
 
12 கிராம கூட்டங்களில் விசாரிக்கப்பட்ட இந்த பாக்ஸைட் சுரங்க திட்டம் ஒருமனதாக நிராகரிக்கப்பட்டது.
 
நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இந்த கூட்டங்கள் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டன.
 
இதன்பிறகு 10 லட்சம் டன் திறன் கொண்ட ஒரு சுத்திகரிப்பு ஆலையை லாஞ்ஜிகரில் நிறுவியது வேதாந்தா. நியம்கிரி சுரங்கத் திட்டத்தைவிட, ஆறு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்வதற்கான அனுமதி லாஞ்ஜிகர் சுரங்கத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
தூத்துக்குடி, தமிழ்நாடு
 
நான்கு லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலைக்கு எதிராக பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. கடந்த வாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர்.
 
ஆலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
 
சுற்றுச்சூழல் விதிகளை மீறியதான குற்றச்சாட்டுகளில் 2013ஆம், ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் மீது ரூ 100 கோடி அபராதம் விதித்தது.
 
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு கூறியது.
 
அதன்பிறகு தொழிற்சாலையை மூடும் உத்தரவையும் உயர் நீதிமன்றம் வழங்கியபோதிலும், அதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.
 
ஸேசா கோவா, கோவா
 
சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்கள் என 2012ஆம் ஆண்டு ஷா கமிஷன் குற்றம்சாட்டிய நிறுவனங்களில் சேஸா கோவா நிறுவனமும் ஒன்று.
 
வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான சேஸா கோவா, இரும்பு தாது சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
 
ஒரு மதிப்பீட்டின்படி, சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலினால் அரசுக்கு சுமார் 35,000 கோடி இழப்பு ஏற்பட்டது.
 
தற்போது அனைத்து குத்தகைகளையும் ரத்து செய்யுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், புதிதாக ஏலம் விட்டு சுரங்க ஒதுக்கீடு செய்யவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.