1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (09:01 IST)

இத்தாலி: 2010ல் வாட்டிகனைத் தாக்கத் திட்டமிட்டிருந்தவர்கள் கைது

இத்தாலியில் அல் - கையீதாவுடன் தொடர்புடையதாக கருதப்பட்டு, தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் பயங்கரவாதிகள், 2010ஆம் ஆண்டில், வாடிகனை தாக்கத் திட்டமிட்டிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சார்டினியாவிலிருந்து செயல்படும் பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் 9 பேரை வெள்ளிக்கிழமையன்று நடந்த தேடுதல் வேட்டையில் இத்தாலியக் காவல்துறை கைதுசெய்தது.
இவர்கள் வாட்டிகனின் திருப்பீடத்தை குறிவைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இவர்கள், 2010ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாட்டிகன் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக சார்டினியாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஒரு தற்கொலைப் படை போராளி ரோமிற்கு வந்தது உட்பட இதற்கென சில முன்னேற்பாடான வேலைகள் நடந்தன எனவும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறப்பட்டாதக அஸோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
 
"எங்களிடம் இதற்கான ஆதாரமில்லை. ஆனால், தீவிரமான சந்தேகம் இருக்கிறது" என காவல்துறைத் தலைவர் மரியோ கார்டா தெரிவித்துள்ளார்.
 
வாட்டிகனின் செய்தித் தொடர்பாளர் ஃபெடரிகோ லோம்பார்டி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அந்த அறிக்கையில், "2010ஆம் ஆண்டில், நடக்காத ஒரு சம்பவத்தைப் பற்றி இப்போது பேசப்படுவதாகத் தெரிகிறது. அதனால், தற்போது இதைப் பற்றிப் பேசுவதிலும் கவலைப்படுவதிலும் எந்தப் பொருத்தமும் இல்லை" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் பாகிஸ்தானிலிருந்தும் ஆஃப்கானிஸ்தானிலிருந்தும் வந்தவர்கள் என காவல்துறை முன்பு தெரிவித்தது.
 
இந்தப் பயங்கரவாத நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானிலிருந்தும் ஆஃப்கானிஸ்தானிலிருந்தும் போலி ஆவணங்களின் மூலம் ஆட்களை ஐரோப்பாவிற்குக் கடத்துவதில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது.
தற்போது, கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள்தான் பாகிஸ்தானின் பெஷாவரில் 2009ஆம் ஆண்டில் ஒரு மார்க்கெட் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்கள் என்றும் நம்பப்படுகிறது.
 
இதில் இருவர்தான் ஒசாமா பின் லேடனுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.