1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 25 மே 2015 (12:53 IST)

அமெரிக்கா: கருப்பின தம்பதிகளை சுட்டுக்கொன்ற காவலர் விடுதலை

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆயுதங்கள் எவையும் வைத்திராத கருப்பின தம்பதிகளை சுட்டுக்கொன்றது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் காவலர் ஒருவர் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்து கிளீவ்லண்ட் நகரில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பொதுமக்கள் அமைதி காக்கும்படி அம்மாநில அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
கிளீவ்லெண்ட் நகரில் திமோதி ரஸ்ஸல் மற்றும் மலிஸா வில்லியம்ஸ் தம்பதிகளை திட்டமிட்டுக் கொன்றார் என்கிற குற்றச்சாட்டில் இருந்து காவலர் மைக்கேல் பிரெலோ விடுவிக்கப்பட்டதை கண்டித்து, நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கருப்பின தம்பதிகளின் காரின் பேனட்டில் அமர்ந்தபடி அவர்களின் முன்பக்க கண்ணாடிவழியாக காவலர் மைக்கேல் பிரெலோ பதினைந்துமுறை சரமாறியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முன்னதாக, 62 காவல்துறையின் ரோந்துக்கார்கள் அதிவேகத்தில் இந்த குறிப்பிட்ட காரை துரத்திப்பிடித்தனர்.
 
கிளீவ்லண்ட் நகர காவல்துறை தலைமை அலுவலகத்தை கடந்து இந்த தம்பதிகளின் கார் சென்றபோது அந்த காரின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எழுந்த வெடிச்சத்தத்தை, துப்பாக்கிச் சூடு என்று தவறாக புரிந்துகொண்ட காவலர்கள் உடனடியாக அந்த காரை அதிவேகமாக துரத்திப்பிடித்து காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். மொத்தம் பதின்மூன்று காவல்துறை அதிகாரிகள் இந்த காரை நோக்கி சுட்டனர். 137 முறை நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்த தம்பதிகள் இருவரின் உடலிலும் தாலா 20 துப்பாக்கிச்சூட்டு காயங்கள் இருந்தன. துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர் அந்த காரை காவலர்கள் சோதனையிட்டதில் அந்த காரில் துப்பாக்கிகள் எவையும் இருக்கவில்லை.
 
அந்த காரை நோக்கி பல காவலர்கள் சுட்டிருந்தாலும், காவலர் மைக்கேல் பிரெலோ மட்டுமே காரின் பேனட்டின்மீது ஏறி நின்று முன்பக்க கார்கண்ணாடியை நோக்கி சரமாரியாக சுட்டதனால் இவர் மீது மட்டுமே திட்டமிட்டு கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அந்த காரை நோக்கி வேறு காவலர்களும் சுட்டனர் என்பதால் இவர் மீது மட்டுமே குற்றம் சுமத்துவதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறதுது.
சமீப ஆண்டுகளில் ஆயுதங்கள் எவையும் வைத்திருக்காத கருப்பினத்தவரை அமெரிக்க காவலர்கள் சுட்டுக்கொன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் இந்த விடுதலை வந்திருக்கிறது.