வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 27 அக்டோபர் 2014 (07:05 IST)

அமெரிக்க, பிரிட்டிஷ் இராணுவ வளாகம் ஆப்கன் படையிடம்

தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆயுதப்படையினர் பயன்படுத்திவந்த பெரும் இராணுவ வளாகம் ஒன்று உள்நாட்டு பாதுகாப்புப் படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.



தாலிபன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தக் கட்டட வளாகம் ஆப்கன் படைகளிடம் கையளிக்கப்படுகின்றது.
 
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளைக் குறைக்கும் நடவடிக்கையின் முக்கிய கட்டமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகின்றது.
 
பாஸ்ச்யன் படைத்தளத்தில் இன்று நடந்த நிகழ்வில் பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் நேட்டோ கொடிகள் இறக்கப்பட்டு, ஆப்கன் கொடி மட்டும் பறக்கவிடப்பட்டுள்ளது.
 
ஹெல்மண்ட் மாகாணத்தில் பிரிட்டன் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதை இன்றைய நிகழ்வு உணர்த்துவதாகவும், இது பிரிட்டன்- ஆப்கன் வரலாறுகளில் முக்கிய அத்தியாயம் என்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் மைக்கல் ஃபாலோன் கூறினார்.
 
ஆப்கானுக்குள் நுழைந்தது முதல் பிரிட்டன் இதுவரை 453 படையினரை இழந்துள்ளது.
 
இதேவேளை, இந்த ஆண்டில் மட்டும் ஆப்கன் படையினரில் நாலாயிரம் பேர் பலியாகியுள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.