வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: திங்கள், 28 ஜூலை 2014 (17:24 IST)

அரசுப் பணியாளர் ஆணையத் தேர்வில் மொழிப் பிரச்சினைக்கு "ஒரு வாரத்தில் தீர்வு"

யு.பி.எஸ்.சி எனப்படும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொடக்கநிலைத் திறனாய்வுத் தேர்வில், ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகள் கேட்கும் முறையை ரத்து செய்யக் கோரி புது தில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்தச் சர்ச்சை தொடர்பில் ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
 
இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் அலுவலகத்தின் மத்திய துணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
அந்தச் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் கலந்துகொண்டார்.
 
யு.பி.எஸ்.சி தேர்வுகளில் திறனாய்வுப் பிரிவில் ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகள் கேட்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஆராய மூன்று பேர் அடங்கிய ஒரு குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அந்த குழு, இந்த விவகாரத்தை ஆராய்ந்து பின் அதன் அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி நடைபெறவுள்ள தொடக்க நிலைத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா, இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படுமா என்பன உள்ளிட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
 
யு.பி.எஸ்.சி தேர்வுகளில் திறனாய்வுப் பிரிவில் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும் என்றும் கூறி யு.பி.எஸ்.சி தேர்வு எழுதும் மாணவர்கள் கடந்த சில நாட்களாக புது தில்லியில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வெளியே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
தொடக்கநிலைத் தேர்வுக்கான அனுமதி அட்டையைக் கடந்த வியாழனன்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழங்கத் துவங்கியதை அடுத்து, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
 
இன்று புது தில்லியில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் தங்களின் அனுமதி அட்டைகளை எரித்தனர்.
 
வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, காவல் துறையினர் சில போராட்டக்காரர்களைத் தடுத்து வைத்தனர்.
 
மேலும் சில மாணவர்கள், இன்று காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து ஆதரவு கோரினர்.
 
காங்கிரஸ் கட்சி, மாணவர்கள் பக்கம்தான் உள்ளது என்றும் வறிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்குக் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்றும் ராகுல் காந்தி அந்த மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம், முன்னதாக நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய துணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு பணியிடங்களுக்கான தேர்வில், மொழி வாரியான பாகுப்பாடு பார்க்கப்படாது என்றும் தெரிவித்திருந்தார்.