1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (19:36 IST)

கடும் விமர்சனங்களுடன் ஐநாவின் காலநிலை ஒப்பந்தம் எட்டப்பட்டது

பெருவில் நடந்து முடிந்த ஐநா மன்றத்தின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டின் முடிவில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டிருக்கிறது.
 
கடந்த இரண்டுவாரகாலமாக பெரு தலைநகர் லிமாவில் நடந்த கடுமையான வாதப்பிரதிவாதங்களின் முடிவில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
 
காலநிலை மாற்றம் தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சிறிய முன்னகர்வாக இது பார்க்கப்படுகிறது.
 
அனால் இந்த ஒப்பந்தத்திற்கு விலையாக, சர்ச்சைக்குரிய முக்கிய முடிவுகள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதகங்களை எதிர்கொள்ளத்தேவையான நிதியை ஏழை நாடுகளுக்கு அதிகரிக்கப்போவதாக இந்த ஒப்பந்தத்தின் வரைவு நகல் கூறுகிறது.
 
பணக்கார நாடுகள் தமது கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைப்போம் என்று கொடுத்திருக்கும் உறுதிமொழிகளை கண்காணிப்பதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்கப்போவதாகவும் இந்த வரைவு நகல் கூறுகிறது.
 
இன்றைய ஒப்பந்தம் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று அடுத்த ஆண்டு எட்டப்படுவதற்கான முன்னெடுப்பு என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
 
அதேசமயம், கரியமிலவாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதில் வளர்ச்சியடைந்த நாடுகளே அதிகமான பங்களிப்பைச் செய்யவேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கான தனது உரிமையை தாம் தக்கவைத்துக்கொண்டிருப்பதாக இந்தியா கருத்து தெரிவித்திருக்கிறது.
 
இந்த வரைவு நகல் பயனற்றது என்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் விமர்சித்திருப்பதுடன், இப்படியானதொரு ஒப்பந்தம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றம் தொடர்பான சர்வதேச சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.