வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 28 மே 2015 (18:21 IST)

திரிபுரா மாநிலத்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கப்பட்டது

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் அமலில் இருந்த சர்ச்சைக்குரிய ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. கலகக்காரர்களை ஒடுக்குவதற்காக 18 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டது.
 

 
கலகக்காரர்களை ஒடுக்குவதற்காக இந்த சர்ச்சைக்குரிய சட்டம் இந்தியாவின் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
 
திரிபுராவில் பிரிவினைவாதகக் கலகக்காரர்களால் வன்முறை அதிகரித்ததையடுத்து 1997 பிப்ரவரியில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
 
தற்போது அந்தப் பிரச்சனைக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதால், இந்தச் சட்டத்திற்கு தேவையேதும் இல்லையென அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் தெரிவித்திருக்கிறார்.
 
இந்தச் சட்டத்தின் மூலம், ராணுவத்தினர் யாரையும் சோதனையிடவும் பொருட்களைக் கைப்பற்றவும் முடியும்.
 
ஒரு ராணுவ வீரர் பொதுமக்கள் யாரையாவது தவறுதலாகவோ தவிர்க்க முடியாமலோ சுட்டுக் கொன்றுவிட்டால், இந்தச் சட்டம் அவரைப் பாதுகாக்கும்.
 
இந்தச் சட்டம் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் மணிப்பூர் மாநிலத்தில் பலர் போலி மோதல்களில் கொல்லப்படுவதற்கு இந்தச் சட்டம் காரணமாக இருந்தது என்றும் மனித உரிமைப் போராளிகள் கூறிவருகின்றனர்.
 
வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் நிலைமையை தன்னுடைய அரசு ஆராய்ந்த பின், மாநில காவல்துறை, பாதுகாப்புப் படையினருடன் கலந்தாலோசித்து இந்த முடிவுக்கு வந்ததாகவும் மாணிக் சர்க்கார் தெரிவித்திருக்கிறார்.
 
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, திரிபுராவில் 42 காவல் நிலையங்கள் இருந்ததாகவும் இந்தக் காவல்நிலையங்களின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் மூன்றில் இரண்டு பகுதியில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் மாணிக் சர்க்கார் கூறியிருக்கிறார்.
 
தற்போது திரிபுராவில் 74 காவல் நிலையங்கள் இருக்கின்றன.
 
இந்தியாவில் சில மாநிலங்களில் பிரிவினைவாத வன்முறை வெடித்ததையடுத்து, சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்தை 1958ல் இந்தியா அமல்படுத்தியது.
 
முதன்முதலாக இந்தச் சட்டம் மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டது. அதன் பின், பிரிவினைவாத வன்முறை நிலவிய பிற வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
 
1989ல் காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய கலகம் வெடித்ததும் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
 
மணிப்பூரில் அமலில் இருக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்து, ஐரோம் ஷர்மிளா என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.
 
தற்போது அவருக்கு குழாய் மூலம் உணவு வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டுவருகிறது.