1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (17:29 IST)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் - சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

இலங்கையில் தமிழர்களின் நலனை பேணிக்காப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வலியுறுத்தியதாக இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை டெல்லியில் தெரிவித்துள்ளனர்.
டெல்லி வந்துள்ள கூட்டமைப்பின் குழுவினர் இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்தார்கள்.
 
இந்தச் சந்திப்பின் போது, தமிழர்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றதாகவும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை முறையாக பெற்றுத் தருவதற்கு உதவிபுரிய கோரப்பட்டதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இலங்கையில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கவும் மொழி மற்றும் கலாச்சார ரீதியான அடையாளங்களை மாற்றியமைக்கவும் மத்திய அரசாங்கத்தால் தீவிரமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் நிலையை உருவாக்க முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் சம்பந்தன் கூறினார்.
 
அத்தோடு வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு முதல்வராக விக்னேஸ்வரன் பொறுப்பு வகித்து வரும் சூழலில் கூட, முதல்வர் பொறுப்பிற்கான கடமைகளை நிறைவேற்ற கூடிய நிலைமை அங்கு இல்லை என்பதை எடுத்துரைத்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
 
இந்தியாவில், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படும் விவகாரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இது இரு நாட்டு அரசாங்கங்களின் விவகாரம் என்றும், இது தொடர்பில் தங்களுக்கு எந்த விதமான கருத்தும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த குழுவினர், நாளை-சனிக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளனர்.