வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Updated : வியாழன், 23 அக்டோபர் 2014 (20:20 IST)

பெங்களூர் பள்ளிக்கூடத்தில் 3 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் 3 வயது சிறுமி ஒருவர் அவரது பள்ளியில் பாலியல் தாக்குதலுக்கு ஆளக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி, பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.

 
கோபமான பல பெற்றோர் மற்றும் சிறார் பாதுகாப்புச் செயற்பாட்டாளர்கள் அந்த தனியார் பள்ளி வளாகத்திற்கு வெளியே புதன்கிழமை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 
குழந்தையிடம் நடத்தப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி அந்தக் குழந்தை பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பள்ளி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அம்மாநில காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார். பள்ளியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாலியல் வல்லுறவு குற்றத்தின் கீழும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். எனினும் இந்தக் குற்றம், பள்ளி வளாகத்தில் தான் நடைபெற்றதா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
குழந்தையைப் பள்ளியிலிருந்து குழந்தையின் தாய் அழைத்துக்கொண்டு வரும்போது அந்தக் குழந்தை அழுததாகவும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் தாய் கூறினார்.
 
முதலில் தன்னை யாரோ அடித்ததாகக் கூறிய அந்தக் குழந்தை, பின்னர் தனது தாயிடம் பாலியல் தாக்குதல் பற்றி தெரிவித்தார் என்று காவல் துறை புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச் சம்பவம் தொடர்பில் தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கடந்த நான்கு மாதங்களில் பெங்களூர் பள்ளி வளாகத்தில் சிறுமி பாலியல் ரீதியில் தாக்கப்பட்டதாக வெளிவரும் மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
 
மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே ஊரில் வேறு ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தோற்றுவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.