வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: சனி, 7 மே 2016 (11:47 IST)

செவ்வாய் கிரகத்துக்கு செல்லப்போகும் ரோபோ தயார்

வந்துவிட்டது வால்கரி. விண்ணுக்குச் செல்லவல்ல இந்த ரோபோட்டை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பவிருக்கிறது நாசா.


 

 
விண்ணில் மட்டுமல்ல, மண்ணிலும் கூட மனிதர்கள் செய்ய முடியாத ஆபத்தான பணிகளை இது செய்ய வல்லது.
 
நாசாவின் அதிநவீன ஹூமனாய்ட் ரோபோட்டான வால்கரியை வைத்து ஸ்காட்லாந்திலிருக்கும் எடின்பரோ ரோபாடிக்ஸ் மையத்தின் ஆய்வாளர்கள் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
 
மனிதர்கள் செல்வதற்கு ஆபத்தான விண் பயணங்களில் பயன்படுத்தும் முக்கிய நோக்கில் வடிவமைக்கப்பட்டது இந்த ரோபோட். இதை சந்திக்க பிபிசிக்கு பிரத்யேக அனுமதி கிடைத்தது.
 
பதினைந்து லட்சம் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட்களுக்கும் மேலாக மதிப்புள்ள இந்த ரோபோவுக்கு 44 இயங்கவல்ல இணைப்புகளுள்ளன. மனித கண்பார்வையை கொடுக்கவல்ல லேசர் ஸ்கேனர்கள், கேமெராக்களும் உண்டு. நாசாவின் மிக மேம்பட்ட ஹூமனாய்ட் இது.
 
"ஆச்சரியமளிக்கவல்ல, வித்தியாசமான ஹூமனாய்ட் இந்த Valkyrie. உலகிலேயே இப்படியானவை மூன்றே மூன்று தான் உள்ளன”, என்றார் பேராசிரியர் விஜயகுமார்.
 
மனிதர்களின் அன்றாட செயல்களுக்கான கட்டளைகளை இதற்கு புரியவைக்கும் பணியில் இவரது குழு ஈடுபட்டுள்ளது.
 
"நாம் இயல்பாய் செய்யும் வேலைகளை இது செய்யவேண்டும். நடப்பது, விழாமல் இருப்பது, வளைவது, நெளிவது இதெல்லாம் நமக்கு இயல்பாய் வருகிறது. ஆனால் ஒரு ரோபோட் இதை செய்யவேண்டுமானால் அதற்கு ஏகப்பட்ட உழைப்பு தேவை”, என்கிறார் விஜயகுமார்.
 
வால்கரிக்கு மனிதர்களின் அடிப்படைத் திறன்கள் கைவரப்பெற்றால் நெருக்கடிகாலங்களில் இதை பயன்படுத்தலாம்.
 
"அன்றாட வாழ்வில் மனிதர்கள் செய்யும் கரிசனையுடனான செயல்களை இது செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறேன். ஃபுகுஷிமா விபத்து போன்றவற்றில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படலாம், சர்வதேச விண் வெளி ஆய்வு மையத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தப்படலாம், இவை தான் நாசாவின் நோக்கம்”, என்கிறார் பேராசிரியர் ஃபலான்.
 
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன் வால்கரி போன்ற ஹூமனாய்டுகளை அனுப்பலாம் என்கிற யோசனையும் உள்ளது.
 
ஆனால் இந்த இளவயது ரோபோட் ஒவ்வொரு செயலையும் படிப்படியாக பயில்கிறது. பலமுறை முயன்றால்தான் ஒவ்வொரு புதிய வேலையையும் கற்கமுடிகிறது. சமநிலையில் நிற்பது, இயங்குவது போன்ற இதன் செயல்கள் மனிதர்களுக்கும் பயன்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
 
"மனிதர்களைப்போன்ற ரோபோட்கள் தொடர்பான ஆய்வுகள் மனித சமூகத்துக்கும் பயன்படும். ஹூமனாய்ட்களின் இயக்கம் தொடர்பான ஆய்வுகள் கைகால்களை இழந்தவர்களுக்கு பெரிதும் பயன்படக்கூடும்", என்கிறார் விஜயகுமார்.
 
வால்கரியின் இலக்கு பூமியைக் கடந்ததாக இருக்கலாம். ஆனால் இதன் ஆய்வுப்பணியால் விளையும் தொழில்நுட்பம் மண்ணில் வாழும் மனிதர்களின் வாழ்வை மாற்றுவதோடு அவர்களின் உயிரைக் காக்கவும் உதவக்கூடும்.