வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: ஞாயிறு, 27 ஜூலை 2014 (23:03 IST)

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைக்க அரசு அனுமதி; அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

2014 ஜூலை பதினெட்டாம் தேதியன்று இந்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீடுக் குழு, மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, பருத்தி, கத்திரி, கொண்டைகடலை ஆகிய பயிர்களை வயல்களில் பயிரிட்டு ஆய்வு செய்ய அனுமதி அளித்தது.
 
ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்குத் தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
 
கட்சிகள் எதிர்ப்பு
 
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்த அனுமதிக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மரபணு மாற்றப்பட்ட அரிசி உள்ளிட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்திய மண் வளத்தையும் உழவர்களின் எதிர்காலத்தையும் சீரழிப்பதற்கே வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோல, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் மரபணு மாற்றுப் பயிர்களின் எதிர் விளைவுகள் பற்றிய கருத்துகளைக் கவனத்தில் கொண்டு, சோதனை முறையில் சாகுபடி செய்வதற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 
ஆனால், இந்த அச்சம் தேவையற்றது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது குறித்து, சென்னையிலிருக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் மூத்த விஞ்ஞானியான ராஜலட்சுமியிடம் கேட்டபோது, தற்போது சோதனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆகவே சூழல் ஆர்வலர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
 
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தயக்கம்
 
ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களைப் பொறுத்தவரை, இம்மாதிரியான சோதனைகளே அபாயகரமானவை என்கிறார்கள்.
 
இந்த அனுமதிக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சிவராமன், பயிர்களில் இருக்கும் வகைகளையே இது ஒழித்துவிடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்.
 
உதாரணமாக, பிடி பருத்தி, இந்தியாவில் அறிமுகமாகி சில ஆண்டுகளிலேயே 90 சதவீதத்திற்கும் மேல், பிடி பருத்தி மட்டுமே விளைவிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
 
அதேபோல, அயல் மகரந்தச் சேர்க்கை மூலம், வேறு வயல்களில் இருக்கும் பயிர்களுக்கும் மரபணு மாற்றம் பரவும் என்று அச்சம் தெரிவிக்கிறார் சிவராமன்.
 
ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் மரபணு மாற்றம் பிற பயிர்களுக்கும் பரவும் என்றாலும், அது பத்து லட்சத்தில் ஒரு வாய்ப்புதான் என்கிறார்கள். இந்தியாவில் இம்மாதிரியான சோதனைகளைத் தரப்படுத்த சுயேச்சையான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.
 
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் மரபணு பயிர் சோதனை சாகுபடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மத்திய பாரதீய ஜனதா அரசு தலையிட்டு, மரபணு மாற்றப்ட்ட பயிர்களின் சோதனைச் சாகுபடிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
 
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தியைப் பயிர் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.