வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2016 (20:32 IST)

வன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்?

பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் பல குற்றங்களுக்கு சில சமயங்களில் திரைப்படங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. தன் மீது விருப்பமில்லாத பெண்ணை காதலிக்க வைக்க 'ஹீரோயிசம்' என்ற பெயரில் திரையில் நடக்கும் கேலி, கிண்டல்கள் சாதாரண இளைஞர்களையும் அவ்வாறு நடக்க தூண்டுவதுடன், பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன.


 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு புறநகர் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பபட்ட சம்பவம், காரைக்காலில் வினோதினி என்ற பெண்ணின் மீது நடந்த அமில வீச்சு, சென்னையில் இணையதள மையத்தில் ஒரு இளம் பெண் மீது நடந்த அமில வீச்சு என்று எல்லாவற்றுக்கும் காரணமாக கூறப்படுவது ஒன்று தான்.

தன்னை காதலிக்க மறுத்த இப்பெண்கள் மீது, அவர்களை ஒருதலைப்பட்சமாக காதலித்த இளைஞர்கள் வன்முறையை பிரயோகித்தனர் என்று கூறப்படுவதுதான் அதிர்ச்சியளிக்கும் அந்தக் காரணமாகும்.

இந்த இளைஞர்களை, தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்களை கொலை செய்யத் தூண்டுவது எது? காதலிக்க வேண்டி பல இளம் பெண்கள் நாளும் கேலி, கிண்டல், அத்துமீறல்களுக்கு ஆளாவது எதனால்? இவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால், தெரிந்தோ, தெரியாமாலோ இவர்கள் பார்த்த திரைப்படங்கள் பெண்களின் காதலை பெற எந்த வகையான யுத்தியை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று காட்சிப்படுத்தியது ஒரு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

திரைப்படங்களில் பார்த்ததை நிஜ வாழ்க்கையில் அமல்படுத்த முயன்றது அந்த இளைஞர்களின் தவறாக இருக்கலாம்.

ஆனால், திரைப்படங்கள் பெண்கள் குறித்தும் காதலைப் பெறுவது குறித்து காட்சிப்படுத்துவதிலும் சற்று கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

காதலிக்க கையாளும் யுத்திகள்

தன் மீது விருப்பமில்லாத பெண்ணை தன்னை காதலிக்க வைக்க, அதாவது தமிழ் சினிமா மொழியில் சொல்ல வேண்டுமானால், தங்கள் வலையில் விழ வைக்க, தமிழ் திரைப்பட கதாநாயகர்கள் பல அலாதியான பாணிகளை கையாள்வர்.

இதில் விந்தையான அம்சம் என்னவென்றால், தங்களை தொந்தரவு, கிண்டல் செய்த கதாநாயகர்களை, அதிகபட்சம் இரண்டு, மூன்று காட்சிகளில் நாயகிகள் காதலிக்க ஆரம்பித்துவிடுவர்.

கடந்த 1960 மற்றும் 70-களில் , எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற கதாநாயகர்களின் திரைப்படங்களில், நாயகி தங்களை காதலிக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகன் மெல்லிய கிண்டல், குறும்புகள் செய்யும் காட்சிகள், பாடல்கள் இடம்பெறும். அவ்வளவு தான்.


 

1980, 1990-களுக்கு பிறகும், தற்போதும் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

ஏப்ரல் , மேயிலே பசுமை ஏதடா?

விஜயகாந்த் மற்றும் ராதா ஆகியோர் இணையாக நடித்து 1986-இல் வெளிவந்த 'அம்மன் கோவில் கிழக்காலே' திரைப்படத்தில் ராதாவை விரட்டி, விரட்டி காதலிப்பார்.

அவ்வாறு செய்யும் போது 'சின்னமணி குயிலே' என்ற பாடலை பாடி விஜயகாந்த், ராதாவை கவர முயற்சிப்பார். இறுதியில் தன் நோக்கத்தில் வென்று விடுவார்.

முரளி நடித்த 'இதயம்' திரைப்படத்திலும் பெண்களை கிண்டல் செய்யும் பாடல் உண்டு. முரளி, தன் காதலை கூட வெளியே கூற மாட்டார், அவரா இப்படி பெண்களை விரட்டுவது, கேலி செய்வது என்ற வியப்பு மேலோங்கலாம். ஆனால், அவர் அப்படி பாடவில்லை. ஒரு பாடல் கட்சிக்காக தோன்றிய பிரபு தேவாவும், நடன குழுவும் 'ஏப்ரல் , மேயிலே பசுமை ஏதடா, ... ' என்று தொடங்கும் பாடலை பாடுவர்.

ஓ ரங்கா.. ஸ்ரீரங்கா..

1992-இல் வெளியான 'சிங்காரவேலன்' திரைப்படத்தில் சிறு வயதிலேயே தொடர்பிழந்த, தற்போது எப்படி இருப்பார் என்று தெரியாத தன் மாமன் மகளான குஷ்புவை சிரமப்பட்டு தேடிக் கண்டு பிடிப்பார் கமல்ஹாசன்.

தன்னை விட்டு விலகி செல்லும் குஷ்புவை , அவர் சென்ற இடத்துக்கெல்லாம் தன் நண்பர்களுடன் சென்று, அவரை காதலிக்க வைப்பதாக கதையம்சம் கொண்டதாக அத்திரைப்படம் அமைந்திருக்கும்.

'அரே… ஓ ரங்கா.. ஸ்ரீரங்கா.. கொப்பர தேங்கா.. இங்க பார் ரங்கா.. நார்த்தங்கா...' என்று தொடங்கும் பாடலை ஒன்றை பாடி இத்திரைப்படத்தில் கதாநாயகன், நாயகியை கிண்டல் செய்வார்.

லூசு பெண்ணே லூசு பெண்ணே!

'வல்லவன்' என்ற திரைப்படத்தில், தன்னை காதலிக்க மறுத்த நயன்தாராவை கவர, சிலம்பரசன் பல வழிகளை கையாள்வார். வெற்றியும் காண்பார். கமலஹாசன் நடித்த கல்யாண ராமன் மாற்று ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படங்களில் பெரிய பற்களுடன் தோன்றும் கமல் போல தானும் உருமாறி, நயன்தாராவை வட்டமிடுவார் சிலம்பரசன். 'லூசு பெண்ணே லூசு பெண்ணே ...' என்று தொடங்கும் பாடலும் இக்காட்சிகளிடையே உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

'அடிடா அவள வெட்டுடா அவள....'

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' திரைப்படத்தில், 'அடிடா அவள வெட்டுடா அவள' என்று பெண்கள் மீது வன்முறையை பிரயோகிக்க தூண்டும் விதமாக ஒரு பாடல் இடம் பெற்றது. பின்னர், இந்த பாடலுக்கு எதிர்ப்பு வந்ததால், சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டன.

கடந்த 2013-இல் வெளிவந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் வளர்ந்து வரும் நாயகனாக இருந்த சிவகார்த்திகேயன், நாயகி ஸ்ரீதிவ்யாவை கவர "ஊதா கலரு ரிப்பன்...." என்ற கிண்டல் பாடலை பாடுவார். சில காட்சிகளும் அவ்வாறே இடம் பெற்றிருக்கும்.


 

'காக்கிச்சட்டை' திரைப்படத்திலும், அதே ஸ்ரீதிவ்யாவை கவர அதே முறைகளை கையாண்டு சிவகார்த்திகேயன் வெற்றி காண்பார்.

ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளிவந்த 'திரிஷா அல்லது நயன்தாரா' படத்திலும் பெண்களை வசப்படுத்த என்ன செய்தாலும் நியாயம் என்பது போல சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதே போல், இன்னும் பல திரைப்படங்கள் உண்டு. இவற்றின் நோக்கம் ஒன்று தான். விருப்பப்படாத பெண்ணை வற்புறுத்தி வழிக்குக் கொண்டு வருவது என்ற நோக்கத்தை மையமாக கொண்டு பல காட்சிகளும், பாடல்களும் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.

ஆனால், தமிழ் திரைப்பட காட்சிகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு யாரேனும் நிஜ வாழ்க்கையில் பெண்களை கிண்டல் செய்து பாட்டுப் பாடினாலோ, விரட்டி, விரட்டி காதலித்தாலோ, அவர்கள் மீது ஈவ்டீஸிங் (பெண்களை தொந்தரவு மற்றும் கிண்டல் செய்வதை தடுக்கும் சட்டம்) சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அனைவரின் மனதிலும் ஆழமாக பதியவேண்டும்.

காதலை மிரட்டியோ, கெஞ்சியோ வாங்க முடியாது, கூடாது. காதலிப்பதற்கு ஓர் ஆணுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமையும் சுதந்திரமும் அதை ஏற்கவோ, நிராகரிக்கவோ ஒரு பெண்ணுக்கும் இருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தும் திரைப்படங்களும் சம அளவில் வர வேண்டும்.

அதேபோல், வன்முறையை கதாநாயகர்களின் தகுதியாக சித்தரிக்கும் போக்கும் மாற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.