1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (12:02 IST)

எல்லா சமூகங்களுக்காகவும் ஐக்கிய முன்னணி உருவாக வேண்டும்

தமிழ் மக்களுக்காக மட்டுமன்றி, இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற அனைத்து சமூகத்தவர்களின் சம உரிமைகளுக்காகவும் குரல்கொடுப்பதற்காக ஐக்கிய முன்னணியொன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈபிஆர்எல்எஃப்- இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஈபிஆர்எல்எஃப் கட்சியின் 34 ஆவது மாநாட்டிற்குத் தலைமைதாங்கி உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
 
அடக்கப்பட்ட இனங்கள் ஐக்கியப்பட்டு போராடுவதன் மூலமே தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிஸக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் ஈபிஆர்எல்எஃப் மாநாட்டின் 2-வது நாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
இலங்கை இனப்பிரச்சனை தொடர்பில் இந்தியா சரியான கொள்கைத் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.
 
இலங்கையின் இன்றைய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைமைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
 
கூட்டமைப்பினர் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் : சம்பந்தர்
 
ஈபிஆர்எல்எஃப் மாநாட்டில் முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலப்படுத்தப்படுவதென்பதும், அதன் அங்கத்துவக் கட்சிகள் தமது தனித்துவத்தைப் பேணுவதென்பதும் இரண்டு விடயங்கள் என்றும் இந்த இரண்டுக்கும் இடையில் மிகுந்த நிதானத்துடன் செயற்பட வேண்டிய சூழலில் இருப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
 
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் மூலம் நிலையான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படத்தக்க வகையில் கூட்டமைப்பினர் ஐக்கியமாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
 
'நாங்கள் தனிநாடு கோரவில்லை. வன்முறையை விரும்பவில்லை. சிங்களவர்களை எதிரிகளாகப் பார்க்கவில்லை. ஏனெனில் அவர்கள் எமது நண்பர்கள். நாங்கள் இறைமையுள்ள மக்களின் உரிமைகளைத்தான் கேட்கிறோம். இது சிங்கள மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல' என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.
 
பல்வேறு தியாஙங்களின் மூலம் அடையப்யட்ட 13 திருத்தச் சட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் பற்றியே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தியாகங்களின் மூலம், அடையப்பெற்ற மாகாண சபை அரைகுறை தீர்வாக இருந்தபோதிலும் அதனை இல்லாதொழிப்பதற்கு முயற்சித்தவர்களுடன் அணிசேர்ந்து முஸ்லிம் கட்சிகள் அரசமைத்தது ஏன் என்று சம்பந்தன் இங்கு கேள்வி எழுப்பினார்.