வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: சனி, 19 ஜூலை 2014 (17:17 IST)

நிலக்கரி முறைகேடுகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம்

இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 1993-2004 காலப் பகுதியிலும் 2006-2009 காலப் பகுதியிலும் மத்திய அரசுக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கங்களைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ 3 ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்தி முடித்துள்ளது.
 
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை 20க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
 
தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு 1,86,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான எல்லா வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரணை செய்ய ஏதுவாக சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2014 ஜூலை 18 வெள்ளிக்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளது.
 
இந்த வழக்குகளின் விசாரணைகளுக்கு சிறப்பு அரசு வழக்கறிஞராக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான விவாதம் வெள்ளியன்று நடைபெற்றபோது, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
 
அதற்கு சிபிஐ தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்குக் கோபால் சுப்ரமணியம் சம்மதித்தால் அவரே அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 
அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், வேறு எவரை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கலாம் என்பது தொடர்பான பரிந்துரையை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.