வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Tamilarasu
Last Modified: செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (11:17 IST)

பிசிசிஐ கூட்டத்தில் ஸ்ரீநிவாஸன் பங்கேற்புக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் நிர்வாகக் கூட்டம் ஒன்றில், வெளியேற்றப்பட்ட பிசிசிஐ தலைவரான என்.ஸ்ரீநிவாஸன் பங்கேற்றது தொடர்பில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற தகுதியில், ஃபிப்ரவரி 8ஆம் தேதி நடந்த பிசிசிஐ நிர்வாகக் கூட்டத்துக்கு ஸ்ரீநிவாஸன் தலைமை ஏற்றிருந்தார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஸ்ரீநிவாஸன், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும் இருப்பதால், கிரிக்கெட் பந்தயங்களில் வர்த்தக ரீதியான பலன்களை எதிர்பார்க்கக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார் என்றும், எனவே பிசிசிஐயில் அவர் நிர்வாக பொறுப்பை வகிக்க முடியாது என்றும் இந்திய உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

அடுத்த ஆறு வாரங்களில் பிசிசிஐ நிர்வாகிகள் பொறுப்புக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கடந்த ஜனவரி 22ஆம் தேதி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஸ்ரீநிவாஸன் அதில் போட்டியிட தடையும் விதித்திருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம், உச்சநீதிமன்ற உத்தரவை ஸ்ரீநிவாஸன் மீறினார் என பிஹார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீநிவாஸனின் செயலுக்கு அதிருப்தி வெளியிட்டனர்.

ஆனால், அடுத்த தேர்தலில் தான் போட்டியிட முடியாது என நீதிமன்றம் அறிவித்ததே ஒழிய, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து தன்னை நீதிமன்றம் நீக்கியிருக்கவில்லை என ஸ்ரீநிவாஸன் தரப்பில் வாதிடப்பட்டது.

ஒரு பதவிக்காக போட்டியிட தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்தப் பதவியை அவர் வகிப்பதென்பது எப்படி சாத்தியம் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் வெள்ளியன்று நடக்கவுள்ளது.