1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (18:57 IST)

அரசு ஊடகங்களுக்கு விளம்பரங்கள்: நெறிமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் நடவடிக்கை

தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் என்ற பெயரில், மக்களின் வரிப் பணத்தை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு விளம்பரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க இந்திய உச்சநீதிமன்றம் குழு ஒன்றை நியமித்துள்ளது.

இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் வரிப் பணத்தின் செலவில் உருவாக்கப்படும் விளம்பரங்களை கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று தெரிவித்து 3 பேர் அடங்கிய ஒரு குழுவை நியமித்துள்ளது.
 
தேசிய நீதித்துறை அகாடமியின் முன்னாள் இயக்குநர் மாதவ மேனன் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் மக்களவை செயலாளர் டி.கே. விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆகியோர் அடங்குவர். இந்தக் குழுவுக்கு தொழில் நுட்ப உதவியைத் தர இந்திய நடுவணரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அரசாங்க விளம்பரங்களின் செலவுகளைக் கண்காணிக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று காமன் காஸ் மற்றும் சி.பி.ஐ.எல் அதாவது செண்டர் பார் பப்லிக் இண்டிரஸ்ட் லிடிகேஷன் என்ற இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடுத்த பொது நலன் வழக்கின் விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
ஆளுங்கட்சிகள் அரசாங்க விளம்பரங்களை தவறான முறையில் பயன்படுத்தி தங்கள் கட்சி தலைவர்களின் அரசியல் செல்வாக்கை உயர்த்துவதை தடுக்க விளம்பரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டது.
 
ஆளும் கட்சிக்கு தொடர்புடைய அரசியல்வாதிகளை போற்றி, பொது கருவூலத்தின் செலவில் அரசியல் செல்வாக்கை உயர்த்துவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு பதினான்கை மீறுவதாகும் என்று காமன் காஸ் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
அரசாங்கங்களின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தகவல் அளிக்க விளம்பரங்களை வெளியிடுவது தவறு அல்ல என்றும் ஆனால் அவ்வாறான விளம்பரங்கள் நியாயமற்ற விதத்தில் ஒருவரின் அரசியல் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் செயல்படுவதாகவும் சி.பி.ஐ.எல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.