வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (15:57 IST)

தூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம் - காரணம் என்ன? #GroundReport

'இருக்கு... ஆனால், இல்லை!' ஒரு படத்தில் காமெடிக்காக சொல்லப்பட்ட டயலாக், தூத்துக்குடி மாவட்டத்தில் உண்மையாகியிருக்கிறது. 60 வீடுகளோடு செல்வ செழிப்பாக இருந்த கிராமம் ஐந்து வருடத்துக்கு முன்னாடி காணாமல் போய்விட்டது. இப்போது ஊர் இருக்கிறது. குடியிருக்க மக்கள் இல்லை.



தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் யூனியனில் இருக்கிறது மீனாட்சிபுரம். செக்காரக்குடி பஞ்சாயத்தில் உள்ள கிராமம் இந்த ஊர்தான் காணாமல் போன கிராமங்கள் லிஸ்டில் புதிதாக சேர்ந்திருக்கிறது. கண் முன்னாடி ஒரு கிராமம் காலியாகியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்? அந்த ஊரை மீண்டும் புதுபிக்கமுடியாதா? என்று சிந்திக்க யாரும் இல்லாமல் போனது தற்கால அரசு நிர்வாகத்துக்கு முன்பு நிற்கும் மிகப்பெரிய கேள்வி.

மீனாட்சிபுரம் ஏன் காணாமல் போனது?



தூத்துக்குடியில்-திருநெல்வேலி சாலையில் இருக்கும் பொட்டலூரணி கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி சென்றால் 12 கிலோ மீட்டர் தொலைவில் வருகிறது மீனாட்சிபுரம். முள் புதராகிப் போன ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியே நம்மை வரவேற்கிறது. பிள்ளைகள் பாடம் படித்த பள்ளி ஆடுகள் இளைப்பாறும் இடமாக மாறியிருந்ததற்கான அடையாளமே தெரிகிறது. ஆட்கள் இல்லாததால் வீடுகள் இடிந்தும், மண் மேடாகியும் காணப்படுகிறது.

ஒரு சில வீடுகளில் இருந்த பொருட்கள் வலுகட்டாயமாக பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மரங்கள் முளைத்து வளர்ந்து நிற்கின்றன. ஒரே ஒரு ஓட்டு வீட்டில் மட்டும் ஆள் இருப்பதற்கான அடையாளம் இருக்கிறது. ஊர் காலியாக இருப்பதால் பன்றி வளர்க்கும் தொழில் செய்யவே அவர் அங்கே இருக்கிறார்.


யாரிடம் பேசுவது என்பதுகூட தெரியாமல் நின்றுகொண்டிருந்தோம். அப்போது வயல்வேலைக்காக அங்கே வந்தார் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் பிபிசி தமிழிடம் பேசியபோது. 'கண் முன்னாடி ஒரு கிராமம் காணாமல் போகிறது என்று நீங்களே வருத்தப்பட்டு இங்கே வந்திருக்கிறீர்கள். வீட்டை காலி செய்துவிட்டு பக்கத்து ஊர்களில் குடியிருக்கும் நாங்கள் எவ்வளவு கவலைப்பட்டிருப்போம்' என்று வினவினார்.

இதுபோன்ற காட்சிகளை படங்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், நாங்கள் அதை அனுபவிக்கிறோம்.


ஊர் இருந்தும் அனாதைகளாக பல ஊர்களுக்கு சென்று கிடைத்த இடத்தில் வீடு பிடித்து நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அனைத்து ஜாதியினரும் இங்கே ஒன்றாகத்தான் இருந்தோம் என்று அவர் மேலும் கூறினார்.

ஊரைச் சுற்றி மானாவாரி விவசாய நிலங்கள் இருக்கிறது. சோளம், மக்காச்சோளம், எள், பருத்தி, மிளகாய் என்று விவசாயத்திற்கும் குறைவில்லை. பிள்ளைங்க படிக்க பள்ளிக்கூடம் இருந்தது. செக்காரக்குடி ஊர் வரை பஸ் வரும். அங்கேயிருந்து எங்க ஊருக்கு நடந்தேதான் வரணும். சைக்கிள், பைக்கில் வந்த வாத்தியார்கள் சரியாக பள்ளிக்கு வந்துகொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வர ஆரம்பித்த டீச்சர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கத் தொடங்கினார்கள். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டது.

நிலத்தடி நீரெல்லாம் உப்பு நீர். அதை குடிநீராக பயன்படுத்தமுடியாது. பக்கத்தில் இருக்கும் செக்காரக்குடி கிராமத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்தார்கள். ஒரு ஓடையைத்தாண்டிதான் அந்த குழாய்கள் வரவேண்டும். ஓடையில் மண் எடுத்தவர்கள் அவ்வப்போது தண்ணீர் வரும் குழாயை சேதப்படுத்திவிடுவார்கள். அப்படி செஞ்சி செஞ்சி தண்ணீர் வரத்தே நின்று போனது. எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று பார்க்காத அதிகாரிகள் இல்லை. எல்லோருக்கும் மனு கொடுத்தோம் என்று முத்துராஜ் தெரிவித்தார்


யாரும் கண்டுகொள்ளவில்லை. எத்தனை நாளைக்குத்தான் பக்கத்து ஊர்களில் போய் தண்ணீர் எடுத்து வரமுடியும். ஒவ்வொருத்தராக ஊரை காலி பண்ணத் தொடங்கிவிட்டார்கள். கடந்த ஐந்து வருடமாக ஊரில் யாரும் இல்லை. வயக்காட்டு வந்துட்டு போகும்போது ஊரையும் என் வீட்டையும் பார்த்துட்டு போவேன். என்னைப்போலவே எல்லோரும் வந்துட்டு போகிறார்கள். இப்போது கடந்த இரண்டு வருடமாக ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் புகழ்பெற்று வருகிறது. ஒரு பூசாரி அவ்வப்போ கோயிலில் குறி சொல்கிறார். அதற்காக நிறையபேர் ஊருக்கு வந்து செல்கிறார்கள்' என பிபிசி தமிழிடம் அவர் கூறினார்.


ஆந்த வழியாக ஆடு மேய்த்து கொண்டிருந்த 60 வயதான முப்பாத்தாளிடம் கிராமத்தை பற்றி கேட்ட பிபிசி தமிழ் அப்போது 'எனக்கு விவரம் தெரிய இந்த ஊர் செழிப்பான ஊராக தான் இருந்தது,வயக்காடு அதிகமான ஊர் நான் சின்னபுள்ளைய்ய இருந்தப்ப இந்த ஊருக்கு தோட்ட வேலைக்கு வந்துருககேன் ஆன ஊரை சுத்தி இருந்த கண்மாயில நீர் வத்துனவுடன் குடி தண்ணீ இல்லாம மக்கள் ரொம்ப சிரமப்பட்டு பக்கத்து ஊர்கள்ள போய் குடி தண்ணீ எடுத்துட்டு வந்து குடுச்சுட்டு இருந்தாங்க ஆன காலப்போக்குல அப்புடியே ஒவ்வொரு ஆளா ஊரை காலி பண்ணி போய்ட்டாங்க இப்ப ஊரே மயான காட்சியா இருக்கு நாங்க அப்பப்ப இந்த பக்கம் ஆடுமேய்க்க தான் வருருவோம் என கூறினார்

கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தாவிடம் தொலைபேசியில் கேட்டபோது. 'அந்த ஊர் காலியானதற்கு குடி தண்ணீர் பிரச்சினைதான் முக்கிய காரணம். சீவலப்பேரி கூட்டுகுடி நீர் திட்டத்தின் கீழ், விருதுநகருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த தண்ணீரை மீனாட்சிபுரத்துக்கும் கொடுத்துகொண்டிருந்தோம். அதை தொடர்ந்து கொடுக்கமுடியவில்லை.



செக்காரக்குடி கிராமத்தில் போர் போட்டு அந்த அந்த தண்ணீர் மீனாட்சிபுரம் கிராமத்திற்கு சப்ளை செய்யப்பட்டு வந்ததது. இடையில் அந்த குழாய்கள் சேதம் அடைந்தது உண்மைதான். இப்போது அது சரி செய்யப்பட்டு தண்ணீர் சப்ளை செய்துவிட்டோம். ஊரில் இருந்த அடி பம்புகளையும் சரி செய்துவிட்டோம். இனிமேல் அந்த மக்கள்தான் ஊருக்கு வரவேண்டும்' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.