வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 15 நவம்பர் 2014 (09:21 IST)

இந்திய மண்ணில் இலங்கையின் தோல்விகள்; தேர்வாளர்கள் நெருக்கடியில்

இந்திய மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகள், இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மட்டுமன்றி ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் மீதும் அணித் தேர்வாளர்கள் மீதும் பயிற்சியாளர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களுக்கும் காரணமாகியுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணியின் திடீர் வெளியேற்றத்தை ஈடுசெய்வதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர அழைப்பின் பேரில், இலங்கை அணி உடற்தகுதி பயிற்சிகளை கைவிட்டுவிட்டு, இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே, கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
 
1996-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவும், இலங்கை அணியின் தற்போதைய நிலைமைக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தினரே பொறுப்பேற்க வேண்டும் என்று மீண்டும் ஊடகங்களில் விமர்சித்திருக்கின்றார்.
 
இந்த தொடர் தொடங்க முன்னமே பிபிசியிடம் பேசியிருந்த அர்ஜுன ரணதுங்க, இந்தியாவின் தேவைகளுக்காகவும், இந்தியாவை மகிழ்ச்சிப் படுத்தவுமே இலங்கை கிரிக்கெட் அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தினர் எப்போதும் பயன்படுத்திக்கொள்வதாக குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக, பிக்-3 என்கின்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மூன்று கிரிக்கெட் நாடுகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கியிருப்பதையும் அர்ஜுன இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார். குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலகரட்ண டில்ஷான் ஆகிய அணியின் மூத்த வீரர்களை உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக
 
'மூத்த வீரர்களுக்கான பதில் வீரர்களை தேர்ந்தெடுக்க இந்தியத் தொடர் உதவும்': சனத்
ஓய்வெடுக்கச் செய்யாமல் இந்திய போட்டிகளுக்கு அனுப்புவதில் உள்ள ஆபத்துக்கள் பற்றியும் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தனது விசனத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டிருந்தார்.
அர்ஜூன ரணதுங்கவின் அணியில் அதிரடி நட்சத்திர வீரராக இடம்பெற்றிருந்த சனத் ஜயசூரிய தான் இலங்கை அணியின் இன்றைய தலைமை தேர்வாளர்.
 
இந்தியாவிடம் இந்தத் தொடரை இழந்திருக்கின்ற இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி சனத் ஜயசூரியவிடம் பிபிசி வினவியது.'உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அணியைத் தேர்வுசெய்யும்போது, மூத்த அணிவீரர்களுக்கு பதிலீடு செய்யக்கூடிய வீரர்களையும் புதிய பந்துவீச்சாளர்களையும் கண்டுபிடிப்பது இந்திய சுற்றுப்பயணத்தின் மூலம் கிடைத்திருக்கின்ற சாதகமான பலன்' என்று சனத் ஜயசூரிய கூறியிருந்தார்.
 
எனினும், இலங்கை கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் எதிர்பார்த்தவாறு, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அணியை தேர்ந்தெடுக்க இந்தியத் தொடர் உதவவில்லை என்று நாட்டின் கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
'சரியான ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி இந்தத் தொடரில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது நடக்கவில்லை. மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களும் தீர்மானிக்கப்படவில்லை' என்றார் இலங்கையின் சூரியன் எப்எம் வானொலியின் விளையாட்டுத் துறை செய்தியாளர் தில்லையம்பலம் தரணிதரன் தமிழோசையிடம் தனது கருத்தைத் தெரிவித்தார்.
 
உபாதை காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்ற லசித் மாலிங்கவை ஈடுசெய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரைக் கண்டுபிடிக்கவும் இலங்கை அணித் தேர்வாளர்களால் முடியாது போயிருப்பதாகவும் தரணிதரன் கூறினார்.