வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 20 ஆகஸ்ட் 2014 (19:57 IST)

இந்தியப் பிரதமரை சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டில்லி பயணம்

இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினரை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டில்லி செல்கின்றனர். அந்தக் குழு வியாழக்கிழமை கொழும்பிலிருந்து புறப்படுகிறது.
 
சம்பந்தன் தலைமையிலான அந்தக் குழுவினர் அதிகாரப் பகிர்வு உட்பட பல விஷயங்களை இந்தியத் தரப்புடன் பேசவுள்ளனர். எனினும் என்னென்ன விஷயங்கள் டில்லியில் விவாதிக்கப்படும் எனபதைக் கூற, சம்பந்தன் மறுத்துவிட்டார்.
 
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளின் பேரிலேயே இந்தச் சந்திப்புகள் நடைபெறுகின்றன என்பதை சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்தியப் பிரதமரை சந்திக்கும் முன்னர், பேசப்படக் கூடிய விஷயங்கள் குறித்து தெரிவிப்பது முறையற்றதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
 
வட மாகாண முதல்வரும் இந்தியாவுக்கு தனியாக ஒரு பயணத்தை மேற்கொள்வார் என்றும், இந்தப் பயணத்தில் அவரும் இடம்பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று தாங்கள் கருதவில்லை என்றும் சம்பந்தன் கூறுகிறார்.
 
ஆனால், தாங்கள் இந்தியாவுக்குச் செல்லும்போது, இலங்கை அரசு தொடர்ச்சியாக இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் குறித்து பேசப்படும் என்று, அந்தக் குழுவில் செல்லும் ஒரு உறுப்பினரான எம் ஏ சுமந்திரன் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று இலங்கை, இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தது, அதற்கும் மேலாகவும் சென்று அதிகாரப் பகிர்வை வழங்குவோம் என்று தெரிவித்திருந்தது ஆகியவை, விவாதிக்கப்படவுள்ளன என்று சுமந்திரன் தெரிவித்தார்.
 
தற்போதுள்ள அதிகாரப் பகிர்வுமுறை எந்த அளவுக்கு அர்த்தமற்றது என்பதும் இந்தியத் தரப்புக்கு எடுத்துச் சொல்லப்படும் எனவும் அவர் கூறுகிறார்.