வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (20:29 IST)

Spider-Man: Far from Home - சினிமா விமர்சனம்

மார்வெல் காமிக்ஸ் தயாரித்து 2017ல் வெளிவந்த Spider - Man Home Coming படத்தின் தொடர்ச்சி. மார்வெல் காமிக்ஸ் யுனிவர்ஸ் பட வரிசையில் 23வது படம்.

Spider - Man Home Coming படத்தையும் Avengers: End Game படத்தையும் பார்த்திருந்தால்தான் இந்தப் படத்தை சிறப்பாக புரிந்துகொள்ள முடியும்.

படத்தின் கதை இதுதான்: பூமியில் உள்ள பஞ்சபூதங்களில் ஒரு அம்சத்தின் வடிவில் அரக்கன் ஒருவன் மெக்ஸிகோவைத் தாக்குகிறான்.

அந்த நேரத்தில் அங்கு தோன்றும் க்வின்டின் பெக் என்ற சூப்பர் ஹீரோ அந்த அரக்கனைக் கொல்கிறார்.

அதே நேரம் நியூ யார்க்கில் பீட்டர் பார்க்கர் (ஸ்பைடர் - மேன்) படிக்கும் பள்ளிக்கூடத்திலிருந்து, மாணவர்களை ஐரோப்பியச் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்கிறார்கள்.

மெக்ஸிகோவைத் தாக்கியது போலவே ஐரோப்பாவின் பல நகரங்களையும் பஞ்சபூத அரக்கர்கள் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு பீட்டரின் உதவி தேவையென்றும் கூறப்படுகிறது.

ஆனால், பீட்டர் இந்த விவகாரத்தில் இறங்கத் தயங்குகிறார். ஆனால், பீட்டர் பார்க்கர் வெனிஸ் நகரில் இருக்கும் நேரத்தில், அந்நகரை பஞ்சபூத அரக்கர்கள் தாக்க, அதனை ஸ்பைடர் - மேனும் க்வின்டின் பெக்கும் சேர்ந்து காப்பாற்றுகிறார்கள்.

அந்தத் தருணத்தில் Iron - Man டோனி ஸ்டார்க்கின் சக்தி வாய்ந்த கண்ணாடி ஸ்பைடர் மேனுக்குக் கிடைக்கிறது.

பஞ்ச பூதங்களை எதிர்த்து க்வென்டின் பெக் செய்யும் சண்டைகளைப் பார்க்கும் ஸ்பைடர் மேன், அந்த சக்தி வாய்ந்த கண்ணாடியை க்வென்டினுக்கு தந்துவிடுகிறான்.

ஆனால், உண்மையில் க்வென்டின் பெக், நல்லவன் இல்லை என்பதும், பஞ்சபூத அரக்கர்கள் தாக்குவதுபோல, பொய் காட்சிகளை உருவாக்கி பயமுறுத்திவருவதும் பிறகுதான் ஸ்பைடர் மேனுக்குத் தெரிகிறது.

அதற்குள், டோனி ஸ்டார்க்கின் கண்ணாடியை வைத்து செயற்கைக்கோள்களில் உள்ள ஆயுதங்களையும் ட்ரோன்களையும் கட்டுப்படுத்தி, தாக்குதல் நடத்த ஆரம்பிக்கிறான் க்வென்டின்.

இந்தத் தாக்குதல்களிலிருந்து ஐரோப்பாவை ஸ்பைடர் மேன் எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது மீதிக் கதை.

நியூயார்க்கில் ஒரு பத்திரிகையில் வேலைபார்த்துக்கொண்டே, சிறுசிறு சாகசங்களைச் செய்துவரும் நட்புணர்வுமிக்க சிறுவனாக ஸ்பைடர் மேனைப் பார்த்து ரசித்தவர்களுக்கு மார்வெல் காமிக்ஸின் ஸ்பைடர் - மேன் அவ்வளவு உவப்பானதாக இருக்கமாட்டார்.

காரணம், இந்த ஸ்பைடர் மேனும் அவரது வில்லன்களும் நிஜ வாழ்க்கையைவிட மிகப் பெரியவர்கள். அவர்களது தாக்குதல்களும் நோக்கமும் புரிந்துகொள்ளக் கடினமானவை.

இந்தப் படத்திலும் அதே மாதிரிதான். க்வென்டின் பெக்கின் இலக்கு என்ன என்பதே தெளிவாக இல்லை. அந்த வில்லன் ஒவ்வொரு நகரத்திலும் ஏற்படுத்தும் சேதமும் உண்மையா, அதுவும் கிராஃபிக்ஸில் ஏற்படுத்தப்படும் காட்சிகளா என்பதிலும் குழப்பம் இருக்கிறது.

"டோனிக்கு, அவருக்குப் பிறகு நீ வருவாய் என்பது தெரிந்திருக்காவிட்டால், அவர் என்ன செய்தாரோ அதைச் செய்திருக்க மாட்டார்" என்று ஒரு வசனம் வருகிறது. இந்த வசனத்தைப் புரிந்துகொள்ள, Iron Man பட வரிசையையும் அவெஞ்சர் பட வரிசைகளையும் பார்த்திருக்க வேண்டும்.

ஆனால், இந்தக் குழப்பம் குறித்து ரொம்பவும் யோசிக்கவில்லையென்றால், படத்தின் இரண்டாம் பாதி நிச்சயம் உற்சாகமூட்டும். வெனிஸ், ப்ராக், பெர்லின், லண்டன் என ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரமாக ஸ்பைடர் - மேனும் க்வின்டின் பெக்கும் சாகஸம் நிகழ்த்துவது குழந்தைகளை நிச்சயம் மகிழ்ச்சியூட்டும்.

ஸ்பைடர் - மேன் பட வரிசைகளில் படத்தின் துவக்கத்திலிருந்தே சிறுசிறு சாகஸங்களின் மூலம் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள். இந்தப் படத்தில் முதலில் வரும் சாகஸத்திற்குப் பிறகு, படத்தின் பிற்பாதி வரை, சற்று மெதுவாகவே நகர்கிறது. இருந்தபோதும், மார்வெல் பாணி சூப்பர் ஹீரோ பட ரசிகர்கள் இந்தப் படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்.