வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: திங்கள், 8 செப்டம்பர் 2014 (17:06 IST)

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஆப்பிரிக்க ஒன்றிய துருப்பினர்: ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்

சொமாலியாவில் நிலைகொண்டுள்ள ஆப்பிரிக்க ஒன்றிய துருப்பினர் அங்கு பலவீனமான சூழ்நிலையிலுள்ள பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வருவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
 
உணவு உதவிப் பொருட்கள் கிடைக்க வேண்டுமானால், பாலுறவுக்கு உடன்பட வேண்டும் எனப் பெண்களும் சிறுமிகளும் வற்புறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பெண்கள் மற்றும் சிறுமிகளாக இருபத்தோரு பேரின் வாக்குமூலங்களைப் பெற்று அதன் அடிப்படையில் அறிக்கை ஒன்றை ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் தயாரித்துள்ளது.
 
புருண்டி, யுகாண்டா போன்ற நாடுகளைச் சேர்ந்த சிப்பாய்கள், இவ்வகையான பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என அவ்வறிக்கை கூறுகிறது.
 
மருத்துவ உதவி கேட்டு வரும் பெண்களும், ஆப்பிரிக்க ஒன்றிய துருப்பினர் தங்கியுள்ள தளங்களுக்குத் தண்ணீர் கேட்டு வருகின்ற பெண்களும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சொமாலியாவில் அல்ஷபாப் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கு எதிராகச் சண்டையிடுவதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் அடங்கிய ஆப்பிரிக்க ஒன்றியப் படையினர், ஏழு வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்சின் குற்றச்சாட்டுக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் இதுவரை பதிலளித்திருக்கவில்லை.