செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By bala
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2017 (11:29 IST)

சிவலிங்கா விமர்சனம்

கன்னடத்தில் சிவ ராஜ்குமார் - வேதிகா நடிக்க பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த சிவலிங்கா படத்தின் ரீ - மேக், கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதால், அதனை தமிழில் ரீ-மேக் செய்திருக்கிறார் வாசு.


 

ஓடும் ரயிலிலிருந்து ரஹீம் என்ற இளைஞன் கீழே தள்ளிவிடப்பட்டு கொல்லப்படுகிறார். இந்த விவகாரத்தை தற்கொலை என நீதிமன்றம் முடிவுகட்டிவிட்டாலும், இந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு சிபிசிஐடி அதிகாரியான சிவலிங்கா வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் கொல்லப்பட்ட ரஹீமின் ஆவி, சிவலிங்காவின் மனைவியின் மேல் புகுந்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க நெருக்கடி கொடுக்கிறது. மனைவியையும் காப்பாற்றி, கொலையாளியையும் எப்படிக் கண்டுபிடிக்கிறார் சிவலிங்கா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

படம் நெடுக துறுதுறுப்பாக வலம்வரும் ராகவா லாரன்ஸ், படத்தின் மிகப் பெரிய பலம். ரஜினி கட் - அவுட் பின்னணியில் 'சின்ன கபாலி' என்று தானே சொல்லிக்கொண்டாலும் படத்தில் தென்படும் உற்சாகத்திற்கு இவரே காரணம்.

பேய் பிடித்து ஆட்டும் மனைவியாக வரும் ரித்திகா சிங், பல காட்சிகளில் வேண்டா வெறுப்பாக வந்துபோவதைப் போல இருக்கிறார். முந்தைய படங்களான இறுதிச் சுற்று, ஆண்டவன் கட்டளை ஆகியவற்றில் தென்பட்ட பிரகாசம் இதில் மிஸ்ஸிங்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபிரவேசம் செய்திருக்கும் வடிவேலு, சில காட்சிகளில் மட்டும் சிரிப்பு மூட்டுகிறார். ரஹீமாக நடித்திருக்கும் சக்திக்கு இது முக்கியமான படமாக இருக்கும் (கன்னடப் படத்திலும் இவரே ரஹீம்). தமிழ் சினிமாவில் பேய் அலை சற்றே ஓய்ந்து, மீண்டும் ஆவேசமாக அடிக்க ஆரம்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இரு வாரங்களுக்கு முன்பாக நயன்தாரா நடித்த டோரா. இப்போது சிவலிங்கா.

சிவலிங்கா பேய்ப் படம் என்றாலும் திகில் படம் அல்ல. ஹீரோயிசம், பாடல்கள், சண்டைகள், காமெடி என எல்லாம் கலந்த ஒரு மசாலாப் படத்தையே கொடுக்க முயற்சித்திருக்கிறார் பி. வாசு. ஆனால், 80களில் வந்த மசாலாப் படம் போல இருக்கிறது. எம்.ஜி.ஆர். படங்களில், தான் ஒரு காவல்துறை அதிகாரி என்பதையே சொல்லாமல் திருமணம் செய்துகொள்வதைப் போல ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் நாயகியை திருமணம் செய்துகொள்கிறார். படத்தில் வரும் காவல்துறை அலுவலகங்கள் எல்லாம் தகவல்தொழில்நுட்பத் துறை அலுவலகங்களைப் போல பிரகாசிக்கின்றன.

ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் ரீ-மேக் என்பதாலோ என்னவோ திரைக்கதையில் இயக்குனர் பெரிதாக மெனக்கெடவில்லை. பல காட்சிகள் துண்டுதுண்டாக நிற்கின்றன. படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் உண்மையான குற்றவாளியை சிவலிங்கா அடையாளம் காட்டும்போது பல்வேறு புள்ளிகளை இணைத்து, குற்றவாளியை அடையாளம் காட்டுகிறார். ஆனால், அவர் எப்படி இவ்வளவையும் கண்டுபிடித்தார் என்பது போகிறபோக்கில் சொல்லப்படுகிறது.

அதேபோல, தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பதை அறிந்துகொள்ள விரும்பும் பேய், நாயகனுக்கு பெரிதாக எந்த உதவியும் செய்வதில்லை, அவ்வப்போது பீடி புகைப்பதோடு சரி.
அகாதா கிறிஸ்டியின் கதைகளில், இறுதிக் காட்சியில் கொலையோடு சம்பந்தம் இருக்கக்கூடும் என சந்தேகத்திற்குள்ளானவர்கள் எல்லாம் ஓரே இடத்தில் கூடியிருக்க, கொலையாளி யார் என்பதை டிடெக்டிவான பொய்ரோ வெளிப்படுத்துவார். அதே போன்ற ஒரு க்ளைமாக்ஸை முயன்றிருக்கிறார் வாசு. இந்தக் காட்சியில் படத்தில் நடித்திருக்கும் எல்லோரையும் ஓரிடத்தில் கூட்டுகிறார் நாயகன். சுவாரஸ்யமாக இருந்தாலும் அந்தக் காட்சியிலிருக்கும் பலருக்கும் அந்தக் கொலைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியெழுகிறது.

சந்திரமுகி போன்ற ஒரு படத்தை எடுத்த பி. வாசு, இன்னும் சிறப்பாக இந்தப் படத்தை செய்திருக்க முடியும்.