வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (17:09 IST)

டெல்லியில் தொடரும் குடியரசுத் தலைவர் ஆட்சி: உச்ச நீதிமன்றம் கண்டனம்

டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுப்பதில் கால தாமதம் செய்து வருவது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
டெல்லி சட்டப்பேரவையை கலைத்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது ‘ஜனநாயக நாட்டில் தொடர்ந்தும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்க கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
 
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு பதவி விலகியதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் அம்மாநில சட்டமன்றம் முடக்கிவைக்கப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
இன்று செவ்வாயன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
 
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்ற டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் வரும் சமயத்தில் மட்டும் மத்திய அரசு புதிய அரசு குறித்த முடிவை அறிவிப்பது ஏன் என்று உச்ச நீதிமன்ற அமர்வு அப்போது கேள்வி எழுப்பியது. அத்துடன் மத்திய அரசு தரப்பிலான நடவடிக்கை தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், டெல்லி சட்டப்பேரவையை கலைப்பது தொடர்பில் ஆம் ஆத்மி கட்சி தொடுத்துள்ள இந்த மனு மேற்கொண்டு விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 
இதனிடையே இது தொடர்பில் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘தேவையான எண்கள் இல்லாமல் எவ்வாறு பாஜக ஆட்சி அமைக்கும்’ என்றும், ‘டெல்லியின் மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக மேற்கொண்ட தந்திரங்கள் தோல்வியில் முடிந்தது’ என்றும் விமர்சித்துள்ளார்.
 
இதற்கு பதிலளித்த டெல்லி பாஜக தலைவர் சதிஷ் உபத்யாய், இவ்வாறான தவறான குற்றச்சாட்டுக்களை பாஜக மீது சுமத்தியதற்காக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேசிய டெல்லி பாஜக தலைவர் சதிஷ் உபத்யாய், ஆளுநர் தங்களுக்கு அழைப்பு விடுத்தால் அந்த நேரத்தில் அதற்கு பொருத்தமான முடிவை பாஜக எடுக்கும் என்று தெரிவித்தார்.
 
கடந்த ஆண்டு நடந்து முடிந்த டெல்லி சட்டபேரவை தேர்தலில், டெல்லி சட்டப்பேரவைக்கான 70 இடங்களில், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை வென்று இரண்டாவதாக வந்தது. பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தாலும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் அது ஆட்சியமைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருந்தது.