வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 29 ஜனவரி 2015 (12:28 IST)

பாலினம் கண்டறிய இணைய விளம்பரங்கள்: இந்திய உச்சநீதிமன்றம் தடை

இணைய தள தேடல் எஞ்சின்களை நடத்தும் கூகிள், யாஹூ, பிங் போன்ற நிறுவனங்கள், தங்கள் தளங்களில் பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுவதை, இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன் கிழமை தடை செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொது நல வழக்கொன்றின் அடிப்படையில் வந்த்து.
 
இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் , குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே பாலினத்தைக் கண்டறியும் முறைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இந்த வசதி குறித்த விளம்பரங்கள் இணைய தேடல் எஞ்சின்களில் தொடர்ந்து வெளிவருவதாகத் தெரிவித்தனர்.
 
இந்த வழக்கு குறித்த அடுத்த விசாரணை அமர்வு பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த விஷயத்தில் விளக்கமான உத்தரவு தரப்படும் என்று நீதிமன்றம் கூறியது.
 
ஐநா மன்ற தரவுகளின்படி, இந்தியாவின் பாலின விகிதாச்சாரம், 2011ம் ஆண்டில் 918ஆக குறைந்திருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சனை நகர்ப்புறங்களிலும், பெருநகரங்களிலும் மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிகிறது.
 
பாலின விகிதம், 1971ம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 964 பெண்குழந்தைகள் என்று இருந்தது.
 
இந்தியா பாலின விகிதப் பிரச்சனை காரணமாக அதிகம் பாதிகப்பட்டிருக்கிறது, இருந்தாலும் இந்த விஷயத்தில் ஒரு வெறுக்கும் மனோபாவம் காணப்படுகிறது, என்று உச்சநீதிமன்றம் கூறியது.