வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (23:01 IST)

சசிகலா நியமனம்: தாற்காலிக ஏற்பாடு ஏன்?

அதிமுக பொதுச் செயலராக, தாற்காலிக அல்லது இடைக்கால அடிப்படையில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பொதுச் செயலராக இன்று அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பதிலளித்துள்ளார்.


 

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான பொதுச் செயலராளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சியின் வேறு ஒரு விதியில் குறிப்பிடப்படுவதால்தான் முழுமையான பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அப்படியானால், இன்றைக்கே அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளராக சசிகலாவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று கேட்டபோது, அது காலதாமதமாகும் என்று தெரிவித்தார்.

அடுத்த இலக்கு...
"அடிப்படை உறுப்பினர்கள் ஒரு கோடியே 64 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் 64 ஆயிரம் கிராமங்களில் உள்ளனர். அங்கெல்லாம் ஓட்டுப் பெட்டி வைத்து, பணிகளை முடிக்க 3 முதல் 6 மாதம் ஆகும். அது தனியாக மீண்டும் நடத்தப்படும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடத்த வேண்டும். நான்கைந்து மாதம் ஆகும் என்பதால் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக, இந்த முறை கையாளப்பட்டுள்ளது. இது எப்போதும் உள்ள நடைமுறைதான். இதற்கு முன்பு, ப.உ. சண்முகம், ராகவானந்தம் போன்றோர் இடைக்காலமாக இப்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்," என்றார் பொன்னையன்.

சசிகலா, அடிப்படை உறுப்பினராக தொடர்ந்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யாததால்தான், தாற்காலிகமாக இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த பிறகு பொதுச் செயலராக முழுமையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்ற அவர், ஆனால் அது தவறும் இல்லை என்று தெரிவித்தார்.

மறைந்த துக்ளக் ஆசிரியர் சோவுடன் (கோப்புப்படம்)

சட்ட சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தாற்காலிக ஏற்பாடா என்று கேட்டபோது, "அந்த சட்ட விதிகளை பொதுக்குழு கூடி தளர்த்தலாம்," என்றார்.

தளர்த்துவது தொடர்பாக இன்று ஏன் விவாதிக்கவில்லை என்று கேட்டபோது, "தளர்த்த வேண்டிய தேவையே இல்லை. தேர்தல் நடத்தி, தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காகத் தளர்த்த வேண்டும்?," என்று கேள்வி எழுப்பினார் பொன்னையன்.

பொதுக்குழுவின் முடிவுகள் கொண்ட விவரங்கள் சசிகலாவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் அதை ஏற்றுக்கொண்டார். அதனால் அவர் அப்போதே பதவியேற்றுக் கொண்டதாகத்தான் அர்த்தம் என்றார் பொன்னையன்.

அடுத்த, இரண்டு தினங்களுக்குள் அதிமுக தலைமையகத்துக்கு சசிகலா வருவார் என்றும் பொன்னையன் தெரிவித்தார்.