வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (20:33 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது வேட்பாளராக தன்னை நிறுத்தக் கோரி அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
 

 
ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்தத் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெ.ஜெயலலிதா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.
 
இந்தத் தேர்தலில் முறைகேடு நடக்காது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தால் மட்டுமே, தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். ஜூன் 3ஆம் தேதி தமிழக காங்கிரசின் செயற்குழு இது குறித்து முடிவெடுக்குமென அவர் கூறியிருக்கிறார்.
 
இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தால் பாமக போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
 
இதற்கிடையில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
 
அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுவருகிறார்.
 
இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து ஆதரவு கோரினார். டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிப்பது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
திமுகவிடம் ஆதரவு கேட்டதால், டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென பாமக தெரிவித்திருக்கிறது.
 
தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சந்தித்துப் பேசினார்.
 
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.