வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (18:37 IST)

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜீன் 27 ஆம் தேதி இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ள ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு, வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
 
இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதையடுத்து தற்போது இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
ஜூன் 3ஆம் தேதியன்று வேட்பமனுத் தாக்கல் துவங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஜூன் பத்தாம் தேதி இறுதிநாள்.
 
11 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். 13 ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.
27ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும். 30 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
 
இந்தத் தொகுதி மட்டமல்லாமல், மேகாலயா, கேரளா, திரிபுரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வேறு 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 27ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.
 
முன்னதாக ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டிருந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
 
இதற்குப் பின் மேல் முறையீட்டில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் தமிழக முதலமைச்சராக கடந்த 23 ஆம் தேதியன்று பதவியேற்றார்.
 
அதற்கு முன்பாகவே, அதிமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.