வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (12:47 IST)

கீழ்நிலை மாந்தர் கண்ணோட்டத்திலிருந்து வரலாறு: "உந்து சக்தி எம்.எஸ்.எஸ்.பாண்டியன்"

திங்களன்று டில்லியில் காலமான சமூக ஆய்வாளர், பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன், பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துக்களையும் ஆங்கிலம் பேசும் உலகுக்கு எடுத்துச் சென்றவர்களில் ஒருவர் என்கிறார் பெரியாரிய-மார்க்ஸிய ஆய்வாளரான எஸ்.வி.ராஜதுரை. 10.11.14 அன்று காலமான எம்.எஸ்.பாண்டியனுக்கு வயது 57.
 
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்த பாண்டியனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) சேர்க்கப்பட்டு, திங்கள் மாலை காலமானார்.
 
கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன், சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படித்தார். பின்னர், சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் சேர்ந்து தமிழகத்தின் நாஞ்சில் நாட்டின் விவசாய உறவுகளைப் பற்றி சிறப்பான ஆய்வுகளைச் செய்தார் என்கிறார் ராஜதுரை.
 
பின்னர் கல்கத்தாவில் உள்ள சி.எஸ்.எஸ்.எஸ் நிறுவனத்தில் சேர்ந்து சிலகாலம் பணியாற்றி, மீண்டும் பின்னர் சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் (Madras Institute of Development Studies) சேர்ந்த பாண்டியன் "கீழ் நிலை மாந்தர்களின் பார்வையில் வரலாறு எழுதப்படும் போக்கிற்கான உந்துசக்தியாகவே திகழ்ந்தார்" என்கிறார் ராஜதுரை.
 
இந்தியாவின் பிரசித்தி பெற்ற இதழான "எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி" என்ற இதழில் 1980களிலிருந்தே ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவந்த பாண்டியன், பொருளாதாரத்துறை மட்டுமின்றி, பண்பாட்டு ஆய்வுத்துறையிலும் தனது அக்கறையைச் செலுத்தினார். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் என்ற "நிகழ்வுப்போக்கு" பற்றி அவர் எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லியில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை பின்னர் " இமேஜ் ட்ராப்" (Image Trap) என்ற பெயரில் புத்தகமாக எழுதி , அப்புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது என்கிறார் ராஜதுரை.
 
தமிழகத்தில் தலித்துகள் மீது பிற்படுத்தப்பட்ட மக்கள் நடத்தும் தாக்குதல்களை , இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கமாகக் காணாமல், அந்த இடைநிலைச்சாதிகளின் ஆதிக்கம் சரிந்துவருவதற்கான அடையாளமாகவே அதைக் காணவேண்டும் என்ற புதிய பார்வையை அவர் அண்மையில் முன்வைத்திருந்தார் என்கிறார் ராஜதுரை.
 
ப்ராமின்-நான் ப்ராமின் (Brahmin-Non Brahmin) என்ற அவரது சமீபத்திய புத்தகம் பல பதிப்புகளைக் கண்டது என்கிறார் ராஜதுரை.
 
ஈழத்தமிழர் பிரச்சினையை, இந்தியாவின் வட மாநிலங்களின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்களை அக்கறை காட்டும்படி செய்தார் என்கிறார் ராஜதுரை.
 
காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ , டில்லியில் உள்ள காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மாணவர்களை ஒன்று சேர்த்து, பொருட்களைத் திரட்டி அனுப்பினார் என்கிறார் ராஜதுரை.
 
ஆக்ஸ்போர்டு, ஹவாய், மின்னிசோட்டா உள்ளிட்ட பல மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்த அவர் சமீபத்தில் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார் என்கிறார் அவர்.
 
பாண்டியனுக்கு, அவரது மனைவி முனைவர் ஆனந்தியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர்.