வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (15:21 IST)

விடுதலையான மீனவர்கள் சொந்த ஊர் வந்தடைந்தனர்

போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் வெள்ளிக்கிழமை காலையில் தங்கள் சொந்த ஊரான ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.


 
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னிப்பு அளித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
 
அவர்கள் வியாழக்கிழமை மாலை இந்தியத் தலைநகர் புதுதில்லி வந்து சேர்ந்தனர். அதற்குப் பிறகு அங்கிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமையன்று அதிகாலை ஒரு மணியளவில் சென்னை வந்தடைந்தனர்.
 
விமான நிலையத்தில் இவர்களை வரவேற்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைச்சர்கள் வளர்மதி உள்ளிட்டவர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
 
ஏராளமான பாரதீய ஜனதாக் கட்சியினரும் கொடிகள், பதாகைகளுடன் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் அங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.
 
விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்த மீனவர்கள் யாரும் அங்கே குழுமியிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் திரையிடப்பட்ட ஒரு வேனில் ஏற்றி, விமான நிலையத்திலிருந்து நேராக அவர்களுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
அங்கு இந்த மீனவர்கள் ஐந்து பேரும் கலந்துகொண்ட நன்றிதெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மீனவர்கள் தங்களுடைய விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.
 
மீனவப் பிரதிநிதிகள், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கூட்டத்தில் பேசினர்.
 
வெள்ளிக்கிழமை அதிகாலையில் மீனவர்கள் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், யார் முயற்சியில் மீனவர்கள் விடுதலை பெற்றார்கள் என மத்திய அரசும் மாநில அரசும் போட்டியிடுவதுபோலத் தெரிகிறதே என்று கேட்டபோது, "போட்டியிருக்கலாம். பொறாமை இருக்கக்கூடாது. எங்களிடம் பொறாமை இல்லை" என்று தெரிவித்தார்.
 
மீனவர்களை பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிடாமல் செய்தது ஏன் என்ற கேள்விக்கும் அவர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.
 
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் 2011ம் ஆண்டில் இலங்கைக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , கொழும்பு உயர்நீதிமன்றத்தால், அக்டோபர் 30ஆம் தேதியன்று மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தனர்.
 
அவர்கள் ஐவரும் நிரபராதிகள் என்றும் அவர்கள் மீதான வழக்கு புனையப்பட்ட வழக்கு என்றும் தமிழக அரசும், தமிழகத்தின் பிரதான அரசியல்கட்சிகளும் வாதாடிவந்தன. இந்திய அரசும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்தது.