1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (14:32 IST)

ஐநா மனித உரிமைகள் அமைப்பை கண்டித்த இலங்கை ஜனாதிபதி

ஐநாவின் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே அவர்கள், அங்கு ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
 
ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உள்ள சிலரது தீய நோக்கத்துடனான திட்டங்களால் துரதிர்ஸ்ட வசமாக பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருக்கிறது என்று அவர் அங்கு கூறியுள்ளார்.
 
ஒரு 5 வருடகாலத்துக்குள்ளேயேபுனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றில் இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அத்தகையவர்கள் கவனத்தில் கொள்ளாது தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் தனது நாடு இன்று இலக்கு வைக்கப்படும் முறையில் ஒரு நடுநிலை இல்லாமையும் பாரபட்சமும் காணப்படுகின்றது என்றும் அவர் அங்கு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏனைய இடங்களில் மனித நேய அவசர நிலைகள் கையாளப்பட்ட முறைகளுடன் ஒப்பிடும் போது இலங்கை விடயத்தில் நிறைய வித்தியாசங்கள், பாரபட்சம் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
 
ஐநாவின் நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் உள்ளூர் நிலைமைகளை சரியாகப் புரிந்துகொண்டு அவர்களை ஒரு சமரசமான வகையில் கையாள வழிவகைகளை கண்டாக வேண்டும் என்றும் ராஜபக்சே கூறியுள்ளார்.
 
கடுமையான யுக்திகளுக்கு பதிலாக தேசிய நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில் ஐநா அமைப்புக்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மத்திய கிழக்கு வன்செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பாலஸ்தீனம் என்ற நாடு இஸ்ரேலுக்கு அருகருகாக அமைதியுடன் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அந்த நாட்டுக்கு ஐநாவின் முழு உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
ஆப்பிரிக்காவில் பரவும் உயிர்கொல்லி நோய்களை ஒழிக்க ஐநா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கையும் உதவும் என்றும் அவர் கூறினார்.
 
சர்வதேச பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.