வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 25 செப்டம்பர் 2014 (21:32 IST)

மனித உரிமை ஆணையர் அறிக்கையை இலங்கை நிராகரிக்கிறது

இலங்கை மனித உரிமைகள் நிலை குறித்து ஐநா மனித உரிமை ஆணையரால் அளிக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
 
பிரான்ஸ் உள்ளிட்ட ஒரு சில நாடுகளே மனித உரிமை ஆணையரின் அறிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன. சீனாவும், ரஷ்யாவும் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளன. அரசியல் தீர்வு குறித்து இந்தியா வலியுறுத்தியுள்ளது.
 
இலங்கை நிலவரம் தொடர்பிலான வாய்மொழி அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமைகள் ஆணையர், இளவரசர் செயித் ரா’அத் செயித் அல் ஹூசேன் சமர்பித்த அறிக்கை குறித்த விவாதம் இன்று ஜெனிவாவில் நடைபெற்றது.
 
இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் மீது அரசாங்க அமைப்புக்களாலும், அரசு சாரா அமைப்புக்களாலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் கண்டு தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை ஆணையம் கோரியது போல ஒரு சர்வேத விசாரணை நடைபெறுவதை சிக்கலாக்கும் நோக்கிலேயே ஒரு அச்சமூட்டக் கூடிய சூழல் இலங்கையில் உருவாக்கப்படுவதாகவும் ஆணையரின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இலங்கை அரசோ சர்வதேச விசாரணை என்பதை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், இது தொடர்பாக எவ்வித ஒத்துழைப்பையும் தாம் தரப்போவதில்லை என்றும் கூறியுள்ளது.
 
"குறையுள்ள அணுகுமுறை, தவறான உதாரணம்"
 
ஜெனிவாவில் இருக்கும் ஐநா அமைப்புகளுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசிங்க இது குறித்து பேசுகையில் ”இலங்கை அரசு, அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 25, 1ஐயும், ஐநா மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதையும் முழுமையாக நிராகரிக்கிறது. இது தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைக்கப் போவதில்லை என்பதையும் இலங்கை தெளிவுபடுத்திவிட்டது. இந்த நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுபவர்களுக்கு நான் மரியாதையுடன் சொல்லிக் கொள்வது என்னவென்றால் குறையுள்ள ஒரு அணுகுமுறையை சரி என்று காட்டவும், ஒரு தவறான முன் உதாரணத்தை உருவாக்கவும் இலங்கை அரசு விரும்பவில்லை", என்றார்.
 
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமை அமைப்புக்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதிலும் கூட்டத்தில் பேசிய நாடுகளில் பிரதிநிதிகள் பலர் இலங்கை அரசின் நிலைப்பாட்டையே ஆதரித்தனர்.
 
பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் பிரதிநிதிகள் மட்டுமே மனித உரிமைகள் நிலை குறித்து கவலை தெரிவித்தனர். அதே நேரம் இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் காட்டும் சிறப்பு கவனம், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இலங்கை குற்றம்சாற்றியது.
 
ரவிநாத ஆரியசிங்க பேசுகையில், " ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அரசியல் ரீதியானது, இந்த நடவடிக்கை ஒரு நாட்டின் இறைமையையும, சுதந்திரத்தையும் பாதிக்கிறது. ஒரு நாட்டின் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் வாய்ப்புக்கள் வழியாகவே பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளையும் இது மீறுவதாக உள்ளது. இலங்கைக்கு உதவுவதுபோல ஐ நா மனித உரிமை அமைப்பு காட்டிக் கொண்டாலும், இதனுடைய நடவடிக்கைகள் இலங்கையில் மீளிணக்கப்பாடு உருவாவதை தடுக்கும் ஒரு சக்தியாக இருக்கிறது" என்றார். சீனாவும், ரஷ்யாவும் இலங்கைக்கு ஆதரவாக பேசின.
 
அரசியல் தீர்வை வலியுறுத்தும் இந்தியா
 
இந்தியப் பிரதிநிதி பேசுகையில், "குறித்த நாடு ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில் இந்த விசாரணையை எப்படி மேலெடுத்துச் செல்வது என்பது குறித்து மனித உரிமை ஆணையர் ஏதும் சொல்லவில்லை என்பதை நாங்கள் கரிசனையுடன் குறித்துக் கொள்கிறோம். யார் இந்த விசாரணைக் குழுவில் இருப்பார்கள், இது எப்படி வேலை செய்யும், இதற்கான நிதி ஆதாரங்களை எப்படி வரப்போகிறது என்பது போன்ற தகவல்களும் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களுடன் பகிரப்படவில்லை. இந்த அறிக்கையின் நம்பகத் தன்மையை உறுதிசெய்ய இதுபோன்ற தகவல்களை கொடுக்குமாறு நாங்கள் கேட்கிறோம். இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவது ஒரு அரசியல் தீர்வை நோக்கி செல்ல வழிவகுக்கும். ஒரு கால எல்லைக்குள் நல்லிணக்க ஆணையக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் 13 ஆவது அரசியல் திருத்தத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை உருவாக்க பாடுபட வேண்டும்" என்றார்.