திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (13:29 IST)

புதுச்சேரி அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் அளித்த முதல்வர்

புதுச்சேரியில் தமது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனிடம் வழங்கியுள்ளார் முதல்வர் ரங்கசாமி.
 
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து ஆளும் கூட்டணி உறுப்பினர்கள், தங்களின் சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமியை தேர்வு செய்தனர்.
 
இதையடுத்து, புதுச்சேரி முதல்வராக கடந்த மே 7ஆம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். ஆனால், அவர் முதல்வர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் அவரது அமைச்சரவையில் யார் இடம்பெறுவர், கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அதில் வாய்ப்பு தரப்படுமா, துணை முதல்வர் பதவி இடம்பெறுமோ என்பது புதிராகவே இருந்தது.
 
இதற்கிடையே, துணை முதல்வர் உள்பட 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியை பாஜக கேட்பதாக தகவல் வெளியானது. சில வார பேச்சுவார்த்தை இழுபறிக்குப் பிறகு, பாஜகவிற்கு சபாநாயகர் பதவி மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகள் கொடுக்க முதல்வர் ரங்கசாமி முன்வந்தார்.‌
 
இதையடுத்து ஜூன் 16ஆம் தேதி பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். ஆனால் அமைச்சர்கள் யார் என்று அப்போதும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சுமார் 9.30 மணிக்கு சென்று தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார்.
 
5 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலில், பாஜகவிற்கு 2 அமைச்சர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் யார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
 
முதல்வர் ரங்கசாமி வழங்கிய அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்புவார். அதைத்தொடர்ந்து, உள்துறை ஒப்புதல் வழங்கியதும் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.