1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (18:06 IST)

ரஷ்ய விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டார்

துருக்கியால் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் விமானிகளில் ஒருவரை சிரியாவின் இராணுவத்தினர் மீட்டுள்ளதாக பிரான்ஸிற்கான ரஷ்யத் தூதர் தெரிவித்திருக்கிறார்.


 

 
யுரோப் வன் வானொலிக்குப் பேட்டியளித்த ரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர் ஆர்லோவ், அந்த விமானி சிரியாவில் உள்ள ரஷ்ய விமான தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
 
எனினும், இந்தத் தகவலை மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் இன்னும் உறுதிசெய்யவில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்திருந்த மற்றொரு விமானியும், விமானிகளை மீட்பதற்காக சென்ற ஹெலிகாப்டரில் ரஷ்யாவின் மரைன் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டுவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
 
தாங்கள் துருக்கிக்கு ஆதரவாக இருப்பதாக, துருக்கி உறுப்பினராக இருக்கும் நேட்டோ அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
 
'முதுகில் குத்தும் வேலை'- புடின்
 
விமானம் தங்களின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக துருக்கி தெரிவித்திருக்கிறது. ஆனால், சிரியாவின் வான் பரப்பில் தங்களுடைய சுகோய்- 24 ரக விமானம் பறந்துகொண்டிருந்தபோது, இன்னொரு விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையாலேயே அது தாக்கப்பட்டிருப்பதாக ரஷ்யாவின் அதிபர் புடின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
 
விமானத்தின் மீதான தாக்குதலை 'முதுகில் குத்தும் வேலை' என்று அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார்.
 
துருக்கியுடன் ராணுவ நடவடிக்கைகளை முறித்துக்கொண்டிருக்கும் ரஷ்யா, வான்-பாதுகாப்பு கட்டமைப்பு பொருத்தப்பட்ட கப்பல் ஒன்று மத்திய தரைக்கடல் பகுதியில் இனி நங்கூரமிட்டிருக்கும் என்றும் சிரியாவில் இருக்கும் ரஷ்யப் படையினருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய இலக்குகள் அழிக்கப்படும் என்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
 
சிரியாவில் வான் தாக்குதல்களை நடத்தும் விமானங்கள் இனி போர் விமானங்களின் பாதுகாப்புடன் செல்லும் என்றும் ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது.
 
பாராசூட்டில் குதித்து தப்பியவர்கள் மீது தாங்களே தாக்குதல் நடத்தியதாக சிரியாவின் துர்க் இன கிளர்ச்சிக் குழுவினர் கூறியுள்ளனர்.


 

 
தாக்கப்பட்ட தங்கள் விமானத்திலிருந்து இரண்டு விமானிகளும் பாராசூட் மூலமாக குதித்தபோது, தரையிலிருந்து அவர்கள் சுடப்பட்டதாகவும் அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
 
எம்ஐ- 8 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த விமானிகளை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த நடவடிக்கையின்போது, ஒரு ஹெலிகாப்டர், சிறிய ரக துப்பாக்கியால் தாக்கப்பட்டு, அருகில் இருந்த பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
 
இந்தத் தாக்குதலிலேயே மரைன் படை வீரர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
மீதமிருந்தவர்கள் சிரியாவின் லட்டாகியாவுக்கு அருகில் இருந்த ஹுமாய்மிம் விமானத் தளத்திற்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
 
அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் தாங்கள் அதனை டாங்க் - எதிர்ப்பு பீரங்கி மூலம் தகர்த்துவிட்டதாக கூறியிருக்கும் சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு ஒன்று, அதன் வீடியோ காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
 
இதனிடையே, ரஷ்யர்கள் யாரும் துருக்கிக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமென்றும் துருக்கிக்கான அனைத்து விமானங்களும் ரத்துசெய்யப்பட வேண்டுமென்றும் அந்நாட்டிற்குள் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.
 
இருதரப்பும் அமைதி காக்க வேண்டுமென்று அமெரிக்காவுடன், ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் ஐநாவும் கோரிவருகின்றன.