1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2014 (16:16 IST)

ஃபிலிப் ஹியூஸ் மரணம்: கிரிக்கெட் தலைக்கவசங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?

கிரிக்கெட் விளையாடும்போது பவுன்சர் பந்து ஒன்று பின்னந்தலையில் பட்டு படுகாயமடைந்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூஸ் உயிரிழந்துள்ளார்.


 
ஹெல்மெட் அணிந்துதான் இவர் மட்டை வீசியிருந்தார் என்றாலும், பந்து தாக்கியதில் இவர் மூளையில் ரத்தக் கசிவும் ரத்தக் கட்டும் ஏற்பட்டிருந்தது.
 
திறன்மிக்க ஒரு இளம் ஆட்டக்காரர் துரதிருஷ்டவசமாய் உயிரிழந்துள்ள இந்த துயர சம்பவம், கிரிக்கெட் தலைக்கவசங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
 
நூற்று அறுபது கிராம் எடையுள்ள ஒரு கிரிட்கெட் பந்து மணிக்கு கிட்டத்தட்ட நூற்றைம்பது கிலோமீட்டர் என்ற கடுமையான வேகத்தில் வந்து ஹெல்மெட்டாலோ, அல்லது உடலின் எலும்பு அமைப்பினாலோ பாதுகாக்கப்படாத ஒரு இடத்தில் வந்து தாக்கியது, பிரகாசமான இளம் வீரர் ஃபிலிப் ஹியூஸின் உயிரையும் கிரிக்கெட் வாழ்க்கையையும் அஸ்தமிக்கச்செய்துவிட்டது.
 
கிரிக்கெட் உபகரணங்களில் பாதுகாப்பு சம்பந்தமான வடிவமைப்புகளில் முன்னேற்றம் காணப்பட்டு வந்துள்ளது என்றாலும், பிடரியை முழுதாக பாதுகாக்கும் விதமான ஹெல்மெட்டுகள் இதுவரை இல்லை என்ற நிலைதான் இருந்துவருகிறது.
 
ஹெல்மெட்டின் வடிவமைப்பில் இன்னும் ஏதாவது செய்து மேலும் அதனைப் பாதுகாப்பாக வடிவமைக்க முடியும் என்று தான் நம்புவதாக சிட்னி பல்கலைக்கழகத்தில் கிரிக்கெட் பயோமெக்கானிக்ஸ் துறையின் தலைவராகவுள்ள ரெனே ஃபெர்டினாண்ட்ஸ் கூறுகிறார்.
 
பிடரியில் ஹெல்மெட்டுக்கு கீழே வரக்கூடிய தலைப்பகுதியும் பாதுகாப்பதென்பது சாத்தியமே என்று அவர் கூறுகிறார்.
 
ஹெல்மெட்டுக்கு கீழே இருக்கும் பகுதிகளை மறைப்பது மாதிரியான தொப்பி ஒன்றை ஆட்டக்காரர்கள் அணிந்துகொள்ளச் செய்யலாம். என்ற ஒரு யோசனை முன்வைக்கப்படுகிறது.
 
பந்து வந்து அடிக்கும்போது அதன் தாக்கத்தில் ஐம்பது முதல் எழுபது சதவீதம் வரையிலான சக்தியை உடலுக்கு அனுப்பாமல் தடுக்ககூடிய பொருட்களைக் கொண்டு இந்த தொப்பியை உருவாக்க முடியும் என்றும் இப்படியான தொப்பியை அணிவதால் ஆட்டக்காரரின் அசைவுகளில் எவ்விதமான தடையும் ஏற்படாது என்றும் ஆய்வு ஒன்று காட்டுகிறது.
 
ஹெல்மெட் அணிந்தபோதும் தலையில் பந்து அடித்து வீரர்கள் காயம்பட்டருந்த சம்பவங்கள் முப்பத்தைந்து வீடியோ படங்களை வைத்து லஃப்பரோ மற்றும் கார்டிஃப் மெட்ரொபாலிடன் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஒரு ஆய்வை நடத்தியிருந்தன.
 
நிறைய தடவைகளில் ஹெல்மெட்டுக்கு முன்னால் இருக்கும் கம்பி வலையில்தான் பந்து படுகிறது. சில நேரங்களில் ஹெல்மெட்டுக்கும் கம்பிக்கும் நடுவிலுள்ள இடுக்கில் பந்து புகுந்து காயம் ஏற்படும். அது மாதிரியான நேரங்களில் வெட்டுக்காயம், எலும்புத் தெரிப்பு, கண்ணிப்போதல் போன்ற காயங்கள்தான் ஏற்படுகின்றன.
 
பின்னந்தலையில் ஹெல்மெட்டுக்கு கீழே பிடரியில் அடிபடுவது என்பது மிகவும் அரிதுதான் என்றாலும், அங்கு அடிபட்டால்தான் மூளையில் ரத்தம் கசியும் அளவுக்கான பாதிப்பு ஏற்படுகிறது என்றும் ஆய்வு காட்டுகிறது.
 
ஃபிலிப் ஹியூஸை பறிகொண்டது அப்படி ஒரு அரிதான ஆபத்தான விபத்து என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.