1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : திங்கள், 7 ஜூலை 2014 (14:19 IST)

பாலஸ்தீன சிறுவன் கொலை வழக்கில் பலர் கைது

பாலத்தீன சிறுவனான முஹமட் அபு காதீர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சந்தேகத்தின் பேரில் பல பேரை இஸ்ரேலிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தக் கொலைக்கு தேசியவாத நோக்கம் இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதாக ஊடகச் செய்திகளும், பெயர் குறிப்பிடாத அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

3 இஸ்ரேலியச் சிறுவர்கள் கடந்த மாதம் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாக யூத கடும் போக்குடையவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலாக இது இருக்கலாம் என்ற சந்தேகத்தினால் தூண்டப்பட்ட பாலத்தீனர்கள் வன்செயலில் ஈடுபட்டனர்.

பாலத்தீன தீவிரவாதக் குழுவான ஹமாஸ் மீது இந்தக் கொலைகளுக்காக இஸ்ரேல் குற்றஞ் சாட்டியது. ஹமாஸ் அதனை மறுத்திருந்தது.

அதேவேளை, கொலை செய்யப்பட்ட முஹமட் அபு காதிரின் அமெரிக்க மைத்துனர் ஒருவரை வீட்டுக் காவலில் வைக்குமாறு இஸ்ரேலிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது.

தனது மைத்துனரின் கொலையை அடுத்த வன்செயல் ஒன்றின் போது 15 வயதான தாரிக் காதிர் தடுத்து வைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது, காதிர் ஆயுதம் தாங்கிய அதிகாரிகளை தாக்கியதாக காவல்துறையினர் கூறுவதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

தாரிக் காதிரை காவல்துறையினர் தாக்கியது குறித்த வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து, அது குறித்து விசாரிப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இது குறித்து ஒரு புலன் விசாரணை நடத்துமாறு அமெரிக்கா கேட்டிருக்கிறது.