வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (19:25 IST)

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான்: பர்வேஸ் முஷாரஃப்

புல்வாமா தாக்குதல், எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது என இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் தணிவதற்குப் பதில் அதிகமாகிக் கொண்டே போகிறதே. இதற்கு யார் காரணம்?
 
இந்தக் கேள்விக்கு பல பதில்கள் இருக்கலாம். ஆனால், இதற்கு முக்கியக் காரணம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய ராணுவத் தளபதியே என்கிறார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப்.
 
இருந்தபோதிலும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாத அமைப்பு என்று ஒப்புக்கொள்கிறார் அவர். தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்த அமைப்பின் மீது எடுத்திருக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டும் முஷரஃப், ஆனால், லஷ்கர்-இ-தொய்பா, காஷ்மீர் மக்களின் நலனுக்காக பணிபுரியும் அமைப்பு என்றும் சொல்கிறார்.
 
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் பிபிசி செய்தியாளர் பூமிகா ராய். பேட்டியை கேள்வி-பதில் வடிவிலேயே முன்வைக்கிறோம்.
 
 
கேள்வி: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்துவதாக நீங்கள் கூறியதாக செய்தி ஊடகங்களில் கூறப்படுகிறது. இது உண்மையா?
 
முஷரஃப்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு எங்கள் நாட்டு உளவுத்துறை ஆதரவு கொடுக்கிறது என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. பலூசிஸ்தானில் 'ரா' (இந்திய உளவு அமைப்பு) எவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு கொடுக்கிறதோ, அதுபோன்று நாங்களும் உங்கள் பகுதியில் செய்வோம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், இவை இரண்டுமே தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
 
இது இரண்டு தரப்பிலும் செய்யப்படுகிறது என்பதையும் பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
 
கேள்வி: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியாவின் விமானப் படைத் தாக்குதல் குறித்து உங்கள் கருத்து என்ன?
 
முஷரஃப்: இந்தியா செய்தது தவறு. இதை சரி என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். எங்கள் எல்லைக்குள் நீங்கள் எப்படி தாக்குதல் நடத்தலாம்? நாங்கள் அதற்கு விடமாட்டோம், பதிலடி கொடுப்போம் என்று சொன்னோம்; அதை செய்தும் காட்டினோம். இப்போது போருக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன.
 
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை தாண்டுவது அல்லது சர்வதேச எல்லையை கடந்து வருவது போன்றவற்றை பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது.
 
கேள்வி: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தீவிரவாத அமைப்பாக பார்க்கும் நீங்கள் லஷ்கர்-இ-தொய்பாவை ஏன் அப்படி கருதுவதில்லை?
 
முஷரஃப்: உண்மை தான். ஏனெனில் ஜெய்ஷ் அமைப்பு பாகிஸ்தானில் என் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பொதுமக்களின் மீதும், தங்கள் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவது தீவிரவாத அமைப்பு தான். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காஷ்மீரை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. எனவே அதை பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பு என்று சொல்லமாட்டேன்.
 
அந்த அமைப்பு தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இரு அமைப்புகளும் வெவ்வேறு தன்மை கொண்டவை. இரண்டையும் ஒப்பிட முடியாது.
 
கேள்வி: ஆனால், லஷ்கர்-இ-தொய்பா கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால் உங்களை, ஹஃபீஸ் சயீதின் ரசிகர் என்று சொல்லியிருக்கிறீர்கள். மும்பை தாக்குதலில் அவருடைய பெயரும் தொடர்புபடுத்தப்படுகிறதே?
 
முஷ்ரஃப்: இந்தியாவில் நடைபெற்ற தாக்குதலில் ஹபீஸ் சயீதின் பெயரை தொடர்புபடுத்துவதே தவறு. லஷ்கர் அமைப்புக்கும், ஹஃபீஸ் சயீதுக்கும் மும்பைத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது.
 
கேள்வி: ஆனால், ஐ.நா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மீது தடை விதித்திருக்கும் நிலையில், அதை எப்படி நீங்கள் மறுக்கிறீர்கள்?
 
முஷ்ரஃப்: ப்ளீஸ்... ஐ.நா பற்றி எனக்கு சொல்லிக் கொடுக்காதீர்கள். அங்கு தீர்மானங்கள் எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பது எனக்குத் தெரியும். அது நியாயமான அமைப்பு அல்ல. அது அழுத்தங்களின் அடிப்படையில் செயல்படும் அமைப்பு. காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படவேண்டும், அப்போதுதான் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். இந்த பிரச்சனைக்கு நாம் தீர்வு காணாவிட்டால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் பதற்றம் தணியாது. பதிலாக தாக்குதல்கள் மேலும் அதிகரித்துவிடும்.
 
கேள்வி: லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தீவிரவாத அமைப்பு இல்லை என்று கூறும் நீங்கள், பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது ஏன் அதற்கு தடை விதித்தீர்கள்?
 
முஷ்ரஃப்: நான் அதிபராக இருந்தபோது, பாகிஸ்தானில் அந்த அமைப்புக்கு தடை விதித்தேன். அப்போது என்னிடம் அந்த அமைப்பு தொடர்பான முழுத் தகவல்களும் இல்லை. எனவே அந்த முடிவு எடுத்தேன். அந்த அமைப்பின் தலைவர், மத ஈடுபாடு கொண்ட இளைஞர். மக்களின் நலனுக்காக செயல்படுவதற்காக அந்த அமைப்பால் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 
இந்த இளைஞர்களை வேலையில் ஈடுபடுத்தாமல் சும்மா இருக்கச் செய்தாலோ அல்லது தண்டனை கொடுத்தாலோ, அவர்கள் தாலிபானின் கைகளுக்கு போய்விடுவார்கள். இவர்கள் ஆயுதங்களை கையில் ஏந்தத் தொடங்கிவிட்டால் நிலைமை என்னவாகும்? எனவே அந்த அமைப்பின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
கேள்வி: ஆனால் மதத்தின் பெயரில் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்கள் கொடுப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
 
முஷ்ரஃப்: இவர்களை யாரும் மூளைச்சலவை செய்யவில்லை. இவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படியே இங்கு இருக்கிறார்கள். தங்கள் உயிரை பணயம் வைத்து, காஷ்மீரில் வசிக்கும் தங்கள் சகோதர-சகோதரிகளுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்கின்றனர். பாகிஸ்தான் அரசு அவர்களை எந்தவிதத்திலும் ஊக்கப்படுத்தவில்லை. இந்த அமைப்பில் ஆள்சேர்ப்பதும் அங்குள்ளவர்களின் விருப்பப்படியே நடைபெறுகிறது.
 
நரேந்திர மோதி vs இம்ரான் கான்: பரப்புரை போரில் வென்றது யார்?
"சர்ஜிகல் தாக்குதலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தடுத்தது": பிரதமர் மோதி
லஷ்கர் அமைப்பில் சேருவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள், காத்துக் கொண்டிருக்கின்றனர். இதை பாகிஸ்தான் அரசு எப்படி தடுக்கும்? அப்படியே தடுத்தாலும் மக்கள் அவர்கள் தரப்பில் இருக்கின்றனர்.
 
கேள்வி: பாகிஸ்தானில் சர்வாதிகார ஆட்சி எப்போதுமே சிறப்பானதாக இருந்திருக்கிறது என்று கருதும் நீங்கள், இம்ரான் கானின் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
 
முஷ்ரஃப்: எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும், மக்களின் நலன் தான் அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். பாகிஸ்தானின் நிர்வாகப் பொறுப்பில் ராணுவத்தை சேர்ந்த ஒருவர் இருக்கும்போது நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று நான் முன்னரே வெளிப்படையாகவே கூறியிருக்கிறேன். அதை மறுத்ததில்லை.
 
அது அயூப் கானின் ஆட்சியாக இருந்தாலும் சரி, என்னுடைய காலமாக இருந்தாலும் சரி. அந்த சமயத்தில், பாகிஸ்தானில் கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் வளர்ச்சியடைந்தன. இப்போது யாருமே கேட்பதற்கே தயாராக இல்லை என்ற நிலையில் என்னதான் செய்வது? ஜனநாயகம்... ஜனநாயகம் என்று கூச்சலிடுகிறார்கள். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? மக்களுக்காக எதுவுமே செய்யாத ஜனநாயகத்தால் என்ன பயன்?
 
கேள்வி: தற்போது பாகிஸ்தான் மாறியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
 
முஷ்ரஃப்: நிச்சயமாக... கடந்த பத்து ஆண்டுகளை பாகிஸ்தானின் மோசமான தசாப்தம் என்றேஎ சொல்லலாம். அந்த சமயத்தில் ஜனநாயக அரசு ஆட்சி செய்தது. ஆனால் மக்கள் துன்பப்பட்டார்கள், குடிநீர் இல்லை, உணவு இல்லை... தற்போது, மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு இம்ரான் கான் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவருடைய நோக்கம் சரியானதாக இருக்கிறது, நன்றாகவே செயல்படுகிறார்.
 
கேள்வி: ஆனால், பாகிஸ்தானில் பெயருக்குத்தான் பிரதமர் இருக்கிறார், செயல்பாடுகள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?
 
முஷரஃப்: இவை அனைத்தும் பரப்பப்பட்டவையே... பாகிஸ்தான் ராணுவம் எதுவுமே செய்யவில்லை. இவை அனைத்துமே வெற்றுப் பேச்சுகள். பாகிஸ்தானை குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக எதையும் சொல்லாதீர்கள். இம்ரான் கான் சரியாகவே செயல்படுகிறார், வேண்டும் என்றே அவர் இலக்கு வைத்து தாக்கப்படுகிறார்.
 
பாகிஸ்தானுக்கு நல்லது செய்கிறார் என்பதால் அவரை குறை சொல்கிறீர்கள். இந்தியாவிற்கு நல்ல தலைவர் வேண்டும் என்பது எங்கள் தேவை அல்ல. பாகிஸ்தானுக்கு சிறந்த தலைவர் தேவை என்பதுதான் எங்களுடைய விருப்பம்.
 
கேள்வி: அப்படியென்றால், இம்ரான்கானின் சிந்தனையும், செயல்பாடும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைகளை தீர்க்கும் என்று கருதுகிறீர்களா?
 
முஷ்ரஃப்: இம்ரான்... இம்ரான் என்று ஏன் திரும்பத் திரும்ப கேட்கிறீர்கள்? மோதியின் தரப்பில் பிரச்சனையை தீர்க்க முன்வர மாட்டார்களா? தன்னால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் இம்ரான் கான் செய்துவிட்டார். ஆனால், இந்தியப் பிரதமரும், பிற அரசியல் தலைவர்களும் தொலைகாட்சியில் கூறும் வார்த்தைகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு சிக்கல்களை தீர்க்கும் ஆர்வம் உள்ளதாக தோன்றுகிறதா?
 
தொலைகாட்சி சேனல்களால்தான் மக்களிடையே வெறுப்புணர்வை அதிகரிக்கின்றன. சர்ஜிகல் ஸ்டிரைக் செய்வோம்... அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று சொல்லி உணர்வுகளை தூண்டி விடுகிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்?
 
பாகிஸ்தான் ஒரு வலுவான நாடு என்பதை இந்தியா புரிந்துக் கொள்ள வேண்டும். அதை சுலபமாக எடை போட்டுவிட வேண்டாம்... ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மை இருக்கிறது, அதற்கு மரியாதை கொடுக்கவேண்டும்.