1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (13:35 IST)

அழிவின் விளிம்பில் அரிய காண்டாமிருகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சாண்டியாகோ மிருகக்காட்சிசாலையில் இருந்த ஆண் வெள்ளைக் காண்டாமிருகம் இறந்திருப்பது, அந்த இனத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
இப்போது உலகில் வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன.
 
ஆங்கலீஃபூ எனும் பெயருடன் இருந்த அந்தக் காண்டாமிருகத்துக்கு 44 வயது என்று கருதப்படுகிறது. முதுமையின் காரணமாக அது உயிரிழந்துளது.
 
அழிவில் விளிம்பில் இருக்கும் இந்த இனத்தின் எஞ்சியுள்ள ஐந்து மிருகங்களில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட்சி சாலையிலும் உள்ளன. இதர மூன்றும் கென்யாவின் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன.
 
விலை மதிப்பு மிக்க அவற்றின் கொம்புகளுக்காக இவை சட்டவிரோதமான வகையில் வேட்டையாடப்பட்டதே, இந்த இனத்தின் அழிவுக்கு முக்கியக் காரணம். அந்தக் கொம்பிலிருந்து குறுவாள் கைப்பிடிகள் செய்ய பயன்படுத்தப்பட்டன.
 
ஆங்கலீஃபூவை அதே மிருகக்காட்சிசாலையில் அங்கிருந்த பெண் கண்டாமிருகமான நோலாவுடன் சேரவிட்டு இனப்பெருக்கம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
 
இதனிடையே கென்யாவில் எஞ்சியிருக்கும் மூன்றே மூன்று வெள்ளைக் காண்டாமிருகங்களில் ஒன்று ஆண் என்றும், மற்ற இரண்டும் பெண்கள் என்றும் கூறியுள்ள வனவிலங்கு சரணாலய அதிகாரிகள், அவையும் இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.
 
இச்சூழலில் இந்த வகை அபூர்வ வெள்ளைக் காண்டாமிருக இனத்தை காப்பாற்ற செயற்கை கருவூட்டல் முறையை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவிக்கப்படுகிறது.