1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: புதன், 9 டிசம்பர் 2015 (18:39 IST)

இந்தியாவுடன் சீபா ஒப்பந்தம் ஏற்படாது: இலங்கைப் பிரதமர் ரணில்

இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (சீபா) இலங்கை அரசு கையொப்பமிடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவுடன் இலங்கை சிபா ஒப்பந்தத்தில் கையொப்பமிடப் போவதாக அரசாங்க மருத்துவர்கள் சங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்று பிரதமர் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.
 
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் சீபா ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருந்தபோது, இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால் இலங்கைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என்று அப்போதைய எதிர்க்கட்சியான தாம் சுட்டிக்காட்டி வந்ததாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
 
எனவே, இந்தியாவுடன் சிபா ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதை தமது அரசாங்கம் தவிர்த்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
 
ஆனால், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான ஒப்பந்தமொன்றை இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக கூறிய பிரதமர், அந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
 
இவ்வாறான ஒப்பந்தங்களை இந்தியாவுடன் மட்டுமல்ல, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் ஏற்படுத்திக் கொள்வது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வாறான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட முன்னதாக, எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் கருத்துக்கள் பெறப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.