வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (06:09 IST)

உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?

பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்நிக் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.



அதைத்தொடர்ந்து செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது தொடர்பான விவாதம் மின்னணு தொழில்நுட்பத் துறையில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது.
 
சரி இந்த பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இருந்து எவ்வளவு தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்?
 
இது குறித்த பல்வேறு ஆய்வுகள், மதிப்பீடுகள் இருந்தாலும், பொதுவான மதிப்பீட்டின்படி ஒரு கைப்பையில் இருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட செல்லிடபேசிகளில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்பதை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
 
மின்னணு கழிவுகள் குறித்த ஐநா மன்றத்தின் அறிக்கை ஒன்றில் 41 செல்லிடபேசிகளில் ஒரு கிராம் தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் உமிகோர் என்கிற தொழில்நுட்ப நிறுவனம் வெறும் 35 செல்லிடபேசிகளில் இருந்தே கூட ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று பிபிசியிடம் தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு டன் பயன்படுத்தப்பட்ட செல்லிட பேசிகளில் இருந்து 300 கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்.
 
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பேசிய ஜெனஸ் பொடோக்நிக், நிலத்தில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும்போது ஒரு டன் தங்கத்தாதில் இருந்து ஒரே ஒரு கிராம் தங்கம் தான் பிரித்தெடுக்கப்படுவதாக தெரிவித்தவர் ஆனால் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து நாம் அதே ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று வாதிட்டார்.
 
அதாவது தங்கச்சுரங்கங்களில் சுமார் ஆயிரம் கிலோ தாதில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பதைவிட, வெறும் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து அதே அளவான ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பது எளிய செயல் என்பது அவரது வாதம்.
 
செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது லாபம் தருமா?
 
இந்த கணக்கெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்து எடுக்க ஆகும் செலவை விட பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி செல்லிடபேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் செயல் வர்த்தக ரீதியில் லாபம் ஈட்டும் தொழிலாக மாற முடியும்.
 
அந்த கோணத்தில் பார்த்தால், நம்மிடம் இருக்கும் ஒரு செல்பேசியில் இருந்து கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு என்பது சராசரியாக இன்றைய நிலையில் வெறும் நூறு (இந்திய) ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது. இந்த நூறு ருபாய்க்கும் குறைவான மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவோ அதைவிட அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்கள். எனவே பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது வர்த்தக ரீதியில் லாபம் தரக்கூடிய தொழில் அல்ல என்கிறார்கள் இவர்கள்.
 
ஆனால் வேறு சில மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்களோ, தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவை விட, பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கும் என்றும், இது லாபகரமான முயற்சியாகவே இருக்கும் என்றும் வாதாடுகிறார்கள்.
 
இந்த வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்க, இன்னொரு கணக்கு இதில் இருக்கும் வேறொரு சிக்கலை விளக்குகிறது. இன்றைய நிலையில் நிலத்தில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் ஏழறை டன் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதே அளவு தங்கத்தை நாம் பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருந்து எடுக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு சாராசரியாக சுமார் 30 கோடி செல்பேசிகளை நாம் மறு சுழற்சி செய்யவேண்டும். அப்படி செய்தோமானால், உலகத்தில் தற்போது இருக்கும் சுமார் எழுநூறு கோடி செல்பேசிகளும் 23 நாட்களில் மறுசுழற்சி செய்து முடிந்துவிடும் என்கிறார்கள் மின்னணு விஞ்ஞானிகள்.