1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (21:39 IST)

நேபாளத்தில் சிக்கிய 56 தமிழர்கள் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கித்தவித்த 56 தமிழர்கள் உள்ளிட்ட 2305 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
 

 
ஆபரேஷன் மைத்திரி என பெயரிடப்பட்டுள்ள இந்த மீட்புப்பணியில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றி வருகிறது என்று இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
 
நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவ மற்றும் உணவு பொருட்கள் தேவையான அளவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
 
மக்களுக்கு தற்காலிக தங்கும் வசதி ஏற்படுத்தி தர படுக்கை விரிப்புகள், கம்பளிகள் மற்றும் கூடாரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
 
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகள் அளிக்கப்படுவதுடன், சிக்கியுள்ள வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள் என்று அது கூறுகிறது.
 
நேபாளம் மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தேசிய பேரிடர் உதவித்தொகையான 1.5 லட்சம் என்பது மாற்றியமைக்கப்பட்டபடி 4 லட்சமாக வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இத்தோடு பிரதமர் உதவித்தொகையான 2 லட்சமும் சேர்த்து மொத்தம் 6 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது.
 
இந்தியாவில் உள்ள பிகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 296 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் உறுதி செய்கின்றன.
 
இதற்கிடையே இந்திய விமானப்படையின் விமானம் மூலமாக டில்லி வந்தடைந்த 38 தமிழர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
முதல்கட்டமாக தமிழக அரசின் உதவியுடன் 12 பேர் இன்று திங்கள்கிழமை காலை விமானம் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
மீதமுள்ளவர்கள் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இதுதவிர சாலை மார்க்கமாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் வந்தடைந்த 18 தமிழர்களை, இரயில் மூலமாக சென்னை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
நேபாளத்தின் பல்வேறு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் நூற்றுக்கணக்கானோரும் விரைவில் சொந்த ஊருக்கு திரும்ப, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பீர் சிங் பஜாஜ் தெரிவித்தார்.
 
மேலும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் மொத்தமாக 311 பேர் அளவுக்கு நேபாளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி செய்தார்.
 
புதுடில்லி வந்தடையும் தமிழர்களுக்கு உதவிட விமான நிலையத்திலும் தனி சிறப்பு குழுவை உள்ளடக்கிய முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.