வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2015 (21:17 IST)

பேச்சுவார்த்தை ரத்து; இந்தியா-பாக். பரஸ்பரம் குற்றச்சாட்டு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ரத்தான நிலையில், இரண்டு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளன.

 
பேச்சுவார்த்தை ரத்தானதை 'துரதிஷ்டவசமான நிலை' என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் வர்ணித்துள்ளார்.
 
சர்ச்சைக்குரிய காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம், ஏற்கனவே எட்டப்பட்டிருந்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீறியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 
ஆனால், பயங்கரவாதம் தவிர வேறு எது தொடர்பிலும் பேசுவதற்கு தயாரில்லை என்று பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலை இந்தியா வரையறுப்பதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
 
பேச்சுவார்த்தைக்கு இந்தியா போடும் 'முன்நிபந்தனைகளை' ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் முக்கிய நகரான ஸ்ரீநகரில் கடும்போக்கு பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானியின் வீட்டுக்கு வெளியே, பிரிவினைவாத ஆதரவாளர்கள் போலீஸாருடன் மோதியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
 
சையத் அலி ஷா கிலானி, அங்கு பாதுகாப்பு படையினரால் தற்காலிகமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். தில்லியிலும் பிரிவினை ஆதரவு மிதவாதத் தலைவர்கள் பலர் சனிக்கிழமை தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.