வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 18 நவம்பர் 2014 (19:19 IST)

'ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீநிவாசனுக்குத் தொடர்பில்லை'

இந்தியாவில் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.ஸ்ரீநிவாசனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று முகுல் முட்கல் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல், திங்கட்கிழமை வெளியாகியுள்ளது.

 
ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான முகுல் முட்கல் குழுவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலரது பெயர்களைக் கடந்த வெள்ளியன்று இந்திய உச்சநீதிமன்றம் வெளியிட்டது.
 
அதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான என்.ஸ்ரீநிவாசன், ஐபிஎல்-இன் தலைமை நிர்வாகி சுந்தர் ராமன், என்.ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்த்ரா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
 
இதைத் தொடர்ந்து 2014 நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட முகுல் முட்கல் குழுவின் அறிக்கையின் சில பாகங்களில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.ஸ்ரீநிவாசன், சூதாட்டக் குற்றங்களில் ஈடுப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில் என்.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட நான்கு உயர் அதிகாரிகள், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய விசாரணைகளை விரைவாக மேற்கொள்ளவில்லை என்று மட்டுமே அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்தியன் பிரிமியர் லீக் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இடையே வகுக்கப்பட்ட ஒப்பந்த விதிமுறை 11.3 சி உட்பிரிவில் கூறப்பட்டுள்ளவை மீறப்படுவது தொடர்பான புகார்கள் பெறப்பட்டவுடன், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு வகித்த என்.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் அதைச் செய்யவில்லை என்று சட்ட வல்லுனர்கள் விளக்கம் அளித்தார்கள்.
 
இந்த அறிக்கை தொடர்பான கேள்விகளை நீதிபதி முட்கலிடம் செய்தியாளர்கள் எழுப்பியபோது, 'நாங்கள் இந்த விவகாரத்தில் கூற வேண்டிய அனைத்தையும் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டோம். அதில் உள்ளது தவிர, கூடுதலாகக் கூற என்னிடம் ஒன்றும் இல்லை' என்று அவர் பதிலளித்துள்ளார்.
 
'குருநாத் மெய்யப்பன் குற்றச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை'
 
என். ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன்
அவ்வாறே, என்.ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாதன் மெய்யப்பன் குறித்து குறிப்பிடுகையில், அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தொடர்பிலான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால் அவர் போட்டி முடிவை முன்னதாகவே நிர்ணயம் செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை என்றும் முட்கல் அறிக்கை தெரிவித்துள்ளது.
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்த்ரா, சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுவோர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் சுட்டிக் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஐபிஎல்-இன் தலைமை நிர்வாகி சுந்தர் ராமனும் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுவோர்களுடன் தொடர்பில் இருந்ததை ஆதாரங்கள் காட்டுவதாக முட்கல் அறிக்கை கூறுகிறது.
 
இந்தத் தகவல் குறித்து சுந்தர் ராமன் கூறுகையில், 'அந்த குறிப்பிட்ட நபர்களுடன் நான் தொடர்பில் இருந்தேன் என்கிறபோதும், அவர்கள் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது' என்று விளக்கம் அளித்தார்.
 
இதன் தொடர்ச்சியாக பெயர் வெளியிடப்பட்டுள்ள இந்த நால்வரும் அளிக்கும் விளக்கங்களைக் கொண்டு வரும் 24ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.