வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2015 (12:30 IST)

கடலில் சேரும் நன்னீர் பருவமழை சுழற்சியை பாதிக்கிறது

மழையிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் கடலுக்கு வந்து சேரும் தண்ணீரின் காரணமாக, இந்தியப் பெருங்கடலில் உருவாகும் நன்னீர் படலம் தெற்காசியாவின் பருவமழை சுழற்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில்தான் 70 சதவீத மழை பெய்கிறது.
 
ஆனால், நீண்ட காலம் மழையே பெய்யாமல் இருப்பது, குறைந்த காலகட்டத்தில் பெரும் மழை பெய்து வெள்ளம் ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் சமீப காலமாக தெற்காசியப் பகுதியில் அதிகரித்துள்ளன.
 
இந்த வருடமும் ஜூன் மாதத்தில் வழக்கமான அளவைவிட அதிக மழை பெய்திருக்கிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எதிர்பார்த்த்தைவிட குறைவாகவே பெய்யும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்த பருவமழையைக் கணிப்பில் வானிலை ஆய்வாளர்கள் தவறுவதற்கு கடலில் இருக்கும் நன்னீரைக் கணக்கில் கொள்ளாதது ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
இந்தியத் துணைக் கண்டத்தின் முக்கிய நதிகளான கங்கை, பிரம்மபுத்திரா, இராவதி போன்ற நதிகள் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றன.
 
"இந்த நதிகளிலிருந்து வரும் நன்னீரும் பெரிய அளவில் பெய்யும் மழையும் வங்கக் கடலை ஒரு தனித்துவமிக்க இடமாக்குகின்றன. வானிலையைக் கணிப்பதில் இதை நாம் கணக்கில் கொள்வதில்லை" என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கடலியல் துறை பேராசிரியராக இருக்கும் எரிக் தஸரோ.
 
"கடற்பரப்பில் இருக்கும் நன்னீர் படலம் மிக லேசானதாக இருக்கும். அவை பருவமழை மேகங்களுடன் எளிதில் சேர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
ஆனால், உப்பு நீர் அவ்வளவு சீக்கிரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது" என்கிறார் அவர்.
 
இந்த முடிவை, வங்கதேசத்தின் வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் ஜெனரலான சம்சுதீன் அஹமது ஏற்றுக்கொள்கிறார்.
 

வங்க தேசத்தைப் பொறுத்தவரை இதுவரை, காற்றின் வேகம், திசை, சூழலில் இருக்கும் ஈரப்பதம் ஆகியவற்றை வைத்தே பருவமழையைக் கணித்துவந்தனர்.
 
"பருவமழையைத் துல்லியமாக கணிக்க வேண்டுமானால், கடலில் இருக்கும் நன்னீர் குறித்து நாம் ஆராய வேண்டும்” என்கிறார் அவர்.
 
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, உலக அளவில் கிடைக்கும் தகவல்களை வைத்து, கடலின் வெப்பநிலையையும் கணக்கில்கொண்டு பருவமழையைக் கணிக்கிறார்கள். நன்னீர் படலத்தை தாங்கள் இதுவரை கணக்கில் 
 
கொண்டதில்லை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
 
பாகிஸ்தானில் பெய்யும் மழையில் 60 சதவீதம் இந்தியப் பருவமழையில் இருந்து கிடைக்கிறது.

மீதமிருக்கும் மழை, டிசம்பருக்கும் பிப்ரவரிக்கும் மத்தியில் அரபிக் கடலில் உருவாகும் குளிர் கால பருவமழையில் இருந்து கிடைக்கிறது.
 
இன்னும் தெளிவு பிறக்கவில்லை
 
இந்தியாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ட்ராபிகல் மீட்டராலஜியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தங்களுடைய கணிக்கும் முறை மேம்பட வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
 
ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனரான எல்.எஸ். ரத்தோர் இந்த விவகாரம் இன்னும் தெளிவாகவில்லை என்கிறார்.
 
தற்போதைய சூழலில் மிக தெளிவில்லாத ஒரு புரிதல்தான் இந்த விவகாரம் குறித்து நிலவுகிறது. ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தலாம் என்கிறார் அவர்.
 
ஆனால், இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகள் பருவமழையைக் கணிக்கும்போது, இந்த நன்னீர் விவகாரத்தைக் கணக்கில் கொள்ள நினைத்தாலும், இது குறித்த தகவல்கள் அவர்களிடம் இல்லை.
 
நதியிலிருந்து எவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறது என்பது பற்றிய சராசரியான தகவல்கள் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது.
 
ஒவ்வொரு வருடமும் கடலில் சேரும் ஆற்று நீரின் அளவு பருவமழையைப் பாதிக்கும் என்பதால், அந்தக் கணக்கு துல்லியமாக இருக்க வேண்டும்.
 
ஆனால், நன்னீர் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்வதில் இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்துவருகிறது.
 
கடலில் சேரும் நன்னீர் என்பது கடலிலும் பருவமழை சுழற்சியிலும் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது குறித்து இந்த நாடுகள் ஒரு ஒப்பந்தத்திற்கு வரவேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.