வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: திங்கள், 17 நவம்பர் 2014 (08:12 IST)

அணையை திறக்க இயலாது: தமிழக அரசு திட்டவட்டம்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறந்துவிட இயலாது என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 140 அடியைத் தாண்டிவிட்டுள்ள நிலையில், அந்த அணை உடைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகின்ற கேரள மக்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக, அணையிலிருந்து தமிழக அரசு நீரைத் திறந்துவிட வேண்டும் என கேரள முதல்வர் தமிழக அரசுக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு பதிலாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிகள் வரையில் நீரைத் தேக்கிக்கொள்ள தமிழக அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
142 அடிகள் வரையில் நீரைத் தேக்கிக்கொள்ளும் அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை தற்போது வலுவாகவே இருக்கிறது என உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு மிக அண்மையில் முடிவுசெய்துள்ளது எனவும் இக்கடிதம் குறிப்பிடுகிறது.
 
எனவே தற்போதைக்கு அணைக்கதவுகளைத் திறந்துவிடுவதற்கான அவசியம் இல்லை என தமிழக முதல்வரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வைகை அணையில் கூடுமான அளவுக்கு நீரைத் தேக்கிக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் முன்வர வேண்டும் என கேரளம் கோரியிருந்தது.


 
ஆனால் வைகை அணைக்கான நீர்ப் பிடிப்பு பகுதிகளில் வட கிழக்கு பருவமழைக் காலத்திலேயே மழை பெய்யும் என்றும், எனவே முல்லைப் பெரியாறு அணையில் தேக்குகின்ற நீரை வைத்துதான், இரண்டு அணைகளுக்கும் இடைப்பட்ட பாசனப் பகுதிகள் பயன்பெறும் என்றும் பன்னீர் செல்வத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கமைய தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கிக்கொள்வதில் கேரளம் தலையிடக் கூடாது என தமிழக முதல்வர் இக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் திறந்து விட்டு நீர்ப் பிடிப்பை 136க்கு குறைக்க உத்தரவிடச் சொல்லி உச்சநீதிமன்றத்தைக் கோரும் மனு ஒன்றை நேற்று சனிக்கிழமை கேரள அரசு தாக்கல் செய்திருக்கிறது.