வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 6 ஜூலை 2014 (12:04 IST)

கட்டட விபத்து: சி.பி.ஐ. விசாரணைக்கு தி.மு.க. கோரிக்கை

சென்னையில் பதினொரு மாடி கட்டடம் இடிந்து 61 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.
 
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும் கட்டடத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசைக் கண்டித்தும், வரும் 12-ம் தேதி ஆளுனர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணி ஒன்றையும் தி.மு.க. அறிவித்துள்ளது.
 
முன்னதாக, இது தொடர்பாக தி.மு.க. தலைவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தக் கட்டடத்திற்கு அனுமதி அளிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை எல்லாம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் முறைப்படி கடைப்பிடித்தார்களா என்றும் கட்டடம் கட்டப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
 
இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு ஒரு நபர் கமிஷனை அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே, பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளின் மீது எந்தத் தவறும் இல்லை என்று முதலமைச்சர் கூறியிருப்பதால், அதை மீறி விசாரணை நீதிபதி எந்தக் கருத்தைத் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
 
புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டியதில் முறைகேடு குறித்த ஆணையம், குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் அமைப்பு, நுகர்வோர் நீதிமன்றம் ஆகியவற்றுக்கும் ரெகுபதியே நீதிபதியாக இருக்கும் நிலையில், அவரையே இந்த ஆணையத்திற்கும் நீதிபதியாக நியமித்திருப்பதிலிருந்தே இந்த ஆணையம் ஒரு கண் துடைப்பு என்று தெரிவதாகவும் அவர் கூறியுள்ளர்.
 
இதில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன, யார் யார் பயன் பெற்றார்கள் என்பது தெரிய வேண்டுமானால் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.
 
இதேவேளை, இதுவரை நடந்துவந்த மீட்புப்பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்ததாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தென் பிராந்திய காவல்துறை துணைத்தலைமை அதிகாரி எஸ்பி செல்வன் அறிவித்திருக்கிறார்.
 
தேடுதல் பணிகள் கட்டடத்தின் தரைத்தளம் வரை நடந்துமுடிந்துவிட்டதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.