வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 21 அக்டோபர் 2014 (08:16 IST)

'மேனகா காந்தி ஜெ.வுக்கு அனுப்பிய கடிதம், பாஜகவின் நிலைப்பாடு அல்ல'

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால பிணையில் வெளிவந்துள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி அனுப்பிய கடிதத்திற்கும் பாஜக கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தமிழ்நாட்டுக்குப் பொறுப்பான பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் அதிமுக அரசுக்கு எதிர்க்கட்சியாக இருந்துவரும் பாஜகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மேனகா காந்தியின் இந்தக் கடிதம் எந்த விதத்திலும் மாற்றியமைக்காது என்றும் அவர் கூறினார்.
 
நேற்று ஞாயிறன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்தும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் தனிப்பட்ட வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியிருந்தனர்.
 
ரஜினிகாந்த் கடிதம்
 
சென்னையில் போயஸ் கார்டன் பகுதியில் மீண்டும் ஜெயலலிதாவைச் சந்திப்பதில் தான் மகிழ்ச்சி கொள்வதாகவும், ஜெயலலிதா எப்போதும் சிறந்த உடல் நலத்துடன் இருக்க தான் விரும்புவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
 
தமிழக பாரதிய ஜனதா கட்சி, நடிகர் ரஜினிகாந்தை அக்கட்சியில் சேர்க்க முயற்சிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்துகொண்டிருக்கும் சமயத்தில் ரஜினிகாந்தின் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அவ்வாறே பாஜகவைச் சேர்ந்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில், ஜெயலலிதாவுக்குச் சிறைத் தண்டனை கிடைத்திருப்பதற்காகத் தான் வருத்தமடைவதாகத் தெரிவித்திருந்தார்.
 
ஜெயலலிதாவுக்குத் தமது ஆதரவும் அனுதாபமும் இருப்பதாகவும் ஜெயலலிதாவின் கஷ்டத்தைப் போக்கத் தாம் ஏதாவது செய்யமுடியும் என்றால் அதைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் மேனகா காந்தி தெரிவித்திருந்தார்.
 
அத்துடன் ஜெயலலிதாவின் துன்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் ஜெயலலிதா மீண்டும் முறைப்படி மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பதை அனைவரும் பார்க்கத்தான் போகிறோம் என்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
 
மேனகாவின் இந்தக் கடிதம் தொடர்பில் பிபிசி தமிழோசையிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 'தற்போது ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் ஒருவரிடமிருந்து அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தாலும், அது எந்த விதத்திலும் பாஜகவின் நிலைப்பாட்டை மாற்றியமைக்காது' என்று கூறினார்.