வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (17:41 IST)

நகரின் பசுமை பூங்காக்கள் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

நகரப்புறங்களில் பசுமையான செடி கொடிகளும், தோட்டங்களும், பூங்காக்களும் அதிகம் இருந்தால் அதன் மூலம் அந்த நகரங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என பிரிட்டன் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸின் தலைவரான மருத்துவர் சர் ரிச்சர்ட் தாம்சன் கூறியுள்ளார்.

செடிகொடிகளால் மன அழுத்தம், கோபம் மற்றும் மன உளைச்சல் போன்றவை குறைகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரிட்டனில் மரணத்துக்கு காரணமான நான்காவது பெரிய காரணியாக இருப்பது என்பது போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது தான் என்றும், ஆகவே அதிக அளவில் நகர்ப்புறங்களில் தோட்டங்கள் அமைத்தால் அவற்றில் மனிதர்கள் உடற்பயிற்சி செய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
லண்டனில் பசுமை நகரங்கள் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கம் ஒன்றில் அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
 
பசுமையான தோட்டங்கள், பூங்காக்கள் போன்றவை நகரப்புறங்களில் இருந்தால் அவற்றால் ஏராளமான நன்மைகள் மனிதர்களுக்கு ஏற்படும் என பல்வேறு ஆராய்ச்சிகள் முன்பே தெரிவித்திருந்தாலும், இதற்கான முன்னெடுப்புக்கள் சுகாதாரத்துறை திட்டங்களுக்குள் சேர்க்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுவதில்லை என்றும் அவர் அந்த கருத்தரங்கில் குறிப்பிட்டார்.
 
அமெரிக்காவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், மருத்துவமனைகளில் பசுமையான தோட்டங்களை அமைப்பதால், நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே பெருமளவு மன அழுத்தம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் தோட்டங்களில் விதவிதமான செடிகள் இருப்பது அவசியம். மேலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பசுமையான தோட்டங்களை பார்ப்பதால், அறுவை சிகிச்சைக்கு பின்னர் வரும் படபடப்பு போன்றவை குறைவதால், அவர்களுக்கு தேவைப்படும் மருந்தின் தேவையும் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
 
அதே போன்று தோட்டத்தில் வேலை செய்வதால் உடல் இலகுவாகிறது, மேலும் தடுமாற்றம் இல்லாமல் நடக்க முடிகிறது, இதனால் தனியாக வீட்டில் இருக்கும் வயதானவர்கள் தடுமாறி வீட்டிற்குள் விழுந்து விடுவது குறைகிறது.
 
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், சூரிய ஒளி உடலில் பட்டால், அதனால் ரத்தக் கொதிப்பு குறைவது தெரிய வந்துள்ளது.
 
இவ்வளவு நன்மை உடைய பசுமை பூங்காக்களையும், தோட்டங்களையும் அமைத்தால் அது சுகாதாரத்துறைக்காக அரசு செலவிடும் தொகையில் ஏராளமான சேமிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சர் ரிச்சர்ட் தாம்சன் கருத்தரங்கில் கூறினார்.