எப்படி ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்: பெண்களுக்கு பாடம்

Icecream
Last Modified வியாழன், 31 ஜனவரி 2019 (11:54 IST)
துருக்கியில், ஒழுங்கு நடத்தைகள் குறித்த படிப்பு ஒன்றில் பெண்கள் ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
"ஒரு பெண்ணாக எப்படி இருக்க வேண்டும்" என்ற பாடம், இஸ்தான்புல்லின் பழமைவாத பக்சிலர் நகராட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில், பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு ஆடை அணிய வேண்டும், நடக்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
 
அதில் கூறப்பட்ட சில பரிந்துரைகள்: பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சரியாக அமர வேண்டும், சாப்பிடும் போது குறைவாக பேச வேண்டும், காலையில் அதிக மேக்-அப் போடக்கூடாது, சொற்களை பார்த்து பயன்படுத்த வேண்டும், "ப்ரோ" போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.
 
பல ஆலோசனைகள் பொதுவானதாக பார்க்கப்பட்டாலும், எப்படி ஐஸ்-கிரீம் சாப்பிட வேண்டும் என்று அவர்கள் கூறியது, சமூக ஊடகவாசிகளின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.
cream
அந்த வழிகாட்டுதலில் பெண்கள் ஐஸ்-க்ரீமை நாக்கால் நக்கி சாப்பிடக்கூடாது என கூறப்பட்டுள்ளது இருப்பினும் அது ஏன் என்று கூறப்படவில்லை.
 
"ஐஸ்-கிரீமை வேறு எப்படி நாங்கள் சாப்பிட வேண்டும்" என்று ட்விட்டரில் ஒரு நபர் வியந்து கேட்டுள்ளார்.
 
"இந்த பாடத்தை நான் கற்றுள்ளேன். இப்போதெல்லாம் நாங்கள் ஐஸ்கிரீமை கடித்து சாப்பிடுகிறோம்" என்று மற்றொரு ட்விட்டர் நபர் பதிலளித்துள்ளார்.
 
'ஆண்களும் செய்கிறார்கள்'
 
இந்த வழிமுறை பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக பலரும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
"இது அபத்தமானது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். நான் எப்படி ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது? பெண்கள் எப்படி இருக்கிறார்களோ, அவர்களை அப்படியே ஒப்புக் கொள்ளுங்கள்" என பிரபல துருக்கி ஆன்லைன் தளமான எக்ஸி சொஸ்லுக்கில் ஒரு நேயர் குறிப்பிட்டுள்ளார்.
 
"ஏன் இந்த பாடங்கள் பெண்களுக்கு மட்டுமே இருக்கின்றன. இதை ஆண்களும் தானே செய்கிறார்கள்" என்று மற்றொரு நேயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்த பாடதிட்டத்தை எடுத்து நடத்திய அர்சு அர்தா கூறுகையில், "பொதுவெளியில் மக்களை பாதிக்காத வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். பொதுவெளியில் பெண்கள் எப்படி சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிறோம்" என்றார்.

இதில் மேலும் படிக்கவும் :