1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (20:47 IST)

ஜிஎஸ்டி வரி: லாபமா? நஷ்டமா?

பல ஆண்டு அரசியல் இழுபறிக்குப் பின் ஆகஸ்ட் 3, 2016 (புதன்கிழமை) அன்று மத்திய மாநில அரசுகள் சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்ற புதிய வரியை விதிக்க அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்தத்தை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது. இந்த சட்டத் திருத்தம் ஏற்கெனவே மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வேறு பல நிகழ்வுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு முதல் ஜிஎஸ்டி என்ற புதிய வரி இந்தியாவில் அமலுக்கு வரும். வேறு பல வரிகள் காணாமல் போகும். ஏன் இந்த ஜிஎஸ்டி? ஏன் இவ்வளவு சர்ச்சை? பார்ப்போம்.


 

 
GST என்றால் என்ன?
 
Goods and Services Tax என்பதின் சுருக்கம் தான் GST. சரக்கு மற்றும், சேவை வரி என்று தமிழில் கூறுவர். இந்தியாவில் இதுவரை மத்திய, மாநில அரசுகள் பொருட்கள் மேல் பல வரிகளை விதிக்கின்றன. அவை, (1) பொருள் உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி (Excise duty), (2) பொருள் விற்பனை மீது மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி, (3) மாநிலங்களுக்கிடையே விற்பனை நடைபெறும்போது எந்த மாநிலத்தில் விற்பனை ஏற்படுகிறதோ அம்மாநிலத்தால் மத்திய விற்பனை வரி விதிக்கப்படும், (4) சேவைகள் மீது மத்திய அரசு சேவை வரி விக்கிறது, (5) சினிமா போன்ற பொழுபோக்கு வியாபாரத்தின் மீது கேளிக்கை வரி மாநிலங்களால் விதிக்கப்படும், (6) ஒரு மாநிலம் அல்லது ஒரு உள்ளாட்சி தங்கள் பகுதிக்குள் வரும் பொருட்கள் மீது நுழைவு வரி, அல்லது ஆக்ட்ராய் உள்ளது, (6) மாநிலங்கள் விதிக்கும் வாகன வரி, என பல வரிகள் பொருட்கள் சேவைகள் மீது உள்ளன. இவை அனைத்தையும் நீக்கிவிட்டு அனைத்துப் பொருட்கள், சேவைகள் மீது (பெட்ரோல், மது வகைகள் நீங்கலாக) ஒரே வரி நடைமுறைக்கு வரவிருக்கிறது.


 

 
புதிய வரியால் நுகர்வோருக்கு என்ன நன்மை?
 
இப்பொது மத்திய, மாநில அரசுகள் தனித்தனியே பொருட்கள் மீது வரி விதிக்கின்றன. ஒரு பொருள் உற்பத்தி செலவு ரூ 100 அதன் மீது 16 சதம் கலால் வரியை மத்திய அரசு வசூலிக்கிறது. அதாவது ரூ 16. அதன் பிறகு ரூ 116 என்ற விற்பனை விலை மீது 12 சதம் (ரூ 13.92) விற்பனை வரி வசூலிக்கிறது. ஆக, பொருளின் மொத்த விலை ரூ 129.92 ஆகும். இதில் மாநிலங்கள் வசூலிக்கும் விற்பனை வரி மட்டுமே விற்பனை ரசீதில் உள்ளதால், அந்த வரி மட்டுமே நுகர்வோருக்கு தெரிகிறது. இந்த இரு வரிகளையும் இணைத்து GST என்ற ஒரே வரி 20% என்று இருந்தால் பொருளின் விலை ரூ 120 என்று தான் இருக்கும். எனவே, பல பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், இதுவரை 14 சதமாக உள்ள சேவை வரி, இனிமேல் GSTயில் 20 சதமாக உயரும்போது சேவைகளின் விலை உயரும். உதாரணமாக தொலைபேசிக் கட்டணம்.
 
தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
 
இதுவரை தமிழகத்தில் உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது 2 சதம் விற்பனை வரியை தமிழக அரசு வசூலிக்கிறது. இதனால் மட்டுமே ரூ 3 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. ஜிஎஸ்டி வந்தால், இந்த வருவாய் இழப்பு ஏற்படும். வேறு பல வரிகளையும் தமிழகம் இழக்கும், எனவே, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தமிழக அரசின் கணக்கு. இதனை மத்திய அரசு முழுமையாக தரவேண்டும் என்று தமிழகம் கேட்கிறது. மேலும் GST அமல்படுத்துவதால் மாநிலங்கள் தாங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழப்பதையும் தமிழகம் எதிர்க்கிறது.
 
என்ன சொல்கிறது மத்திய அரசு?
 
இப்போது நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தில் ஒரு மாநிலத்திற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஐந்து ஆண்டுகள் வரை மத்திய அரசு ஈடு செய்வதாகக் கூறுகிறது. ஆனால், இதனை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக குறைக்க சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த சட்ட திருத்தம் கூறுகிறது. இது தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இருப்பினும், இப்போது இந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சிந்திக்க வேண்டும்.


 

 
அடுத்தது என்ன?
 
இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா மீண்டும் மக்களவையில் நிறைவேற்றபடும். பிறகு குறைந்தபட்சம் 50 சதம் மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 15 மாநிலங்கள் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிவிடும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது.
 
அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் என்ற குழுவை ஜனாதிபதி உருவாக்குவார். இதில் மத்திய நிதி அமைச்சர் தலைவராகவும், மாநில நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்த ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி தொடர்பான சட்டங்கள், வரி விகிதங்கள், வரி வசூலிக்கும் நிர்வாக அமைப்பு ஆகிவற்றை முடிவு செய்து சட்ட முன்வரைவுகளை வழங்கும். இதனை மத்திய, மாநில அரசுகள் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் சட்டங்களாக இயற்றி ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்துவர்.


 

 
மத்திய, மாநில அரசுகள் எப்படி இணைந்து செயல்படுத்தும்?
 
நாடு முழுவதும் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம் இருக்கும், உதாரணமாக 20 சதம் என்று வைத்துக்கொள்வோம். இதனை இரு பகுதிகளாக பிரிப்பார்கள். ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்து அதே மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் அந்த 20 சதம் ஜிஎஸ்டி வரியானது மத்திய ஜிஎஸ்டி என்றும் மாநில ஜிஎஸ்டி என்றும் பிரித்து வரிகள் சமர்பிக்கப்படும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பங்குகள் செல்லும். மாறாக, ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்து வேறு மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால், அதற்கும் 20 சதம்தான் ஜிஎஸ்டி. அதில் மத்திய பங்கு மத்திய அரசுக்கு செல்லும், ஆனால், மற்றொரு பங்கு எந்த மாநிலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதோ அந்த மாநிலத்திற்கு செல்லவேண்டும். இதனை ஐஜிஎஸ்டி என்ற பொது கணக்கில் வரவு வைத்து பின்பு பொருள் சென்று சேர்ந்த மாநிலத்தில் உள்ள அரசுக்கு அந்த வரி பணம் சென்று சேரும்.


 

 
சிக்கலான வரி செலுத்தும் முறையா ஜிஎஸ்டி?
 
இதனை எளிமைப்படுத்துவதற்காக ஜிஎஸ்டி நெட்வொர்க் என்ற ஒரு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனம், முழுவதும் கணினி மயமான வரி செலுத்தும் முறையை ஏற்படுத்திவிட்டது. எல்லா மாநிலங்களுக்கும் தங்கள் வரி வசூலிக்கும் நிர்வாக அலுவலகங்களை கணினிமயமாக்கவும், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந் நிறுவனம் உதவி செய்கிறது. பல தனியார் கணினி மென்பொருள் நிறுவனங்களும் இந்த வேலையை செய்துள்ளன.
 
ஜிஎஸ்டி வரியை வங்கிகளில்தான் கட்டவேண்டும், இணையதளம், வங்கி சேவையில் வரி செலுத்துவது ஊக்குவிக்கப்படும். இதற்காக மத்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தனியான பண வரிவர்த்தனை வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
 
வியாபாரிகள், சிறு வியாபாரிகள் கவலைப்படலாமா?
 
இதுவரை பலவித வரிகளை செலுத்திய வியாபாரிகள் இனிமேல் ஒரே ஜிஎஸ்டி வரியை செலுத்தவேண்டும். இது அவர்களின் வரி செலுத்தும் செலவை குறைக்கும். ஆனால் சிறு வியாபாரிகள், கணினி மயமாக்கப்பட்ட ரசீது முறையை, வரி செலுத்தும் முறையை செயல்படுத்த சிரமப்படுவர். இதனை நீக்கும் பொருட்டு மிகச் சிறிய வியாபாரிகளை இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து நீக்கவும் பேசப்படுகிறது.