செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 21 ஜனவரி 2015 (21:58 IST)

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: முக்கியத் தலைவர்கள் மனு தாக்கல்

டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் கிரண் பேடி ஆகியோர் இன்று தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமையன்றே தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை வாழ்த்துவதற்காகக் குறுக்கிட்டதால், அவரால் குறித்த நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை.
 
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்குக் கடைசி நாளான இன்று, பாஜக வேட்பாளரான கிரண் பேடியும் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பிப்ரவரி ஏழாம் தேதியன்று டெல்லி சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடக்கிறது. 10ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும்.
 
டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் எதிர்ப்பு மசோதா நிறைவேறாததையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
கெஜ்ரிவால், கிரண் பேடி ஆகிய இருவரும் ஊர்வலம், சாலையோரக் கூட்டங்கள் எனத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கெஜ்ரிவால் புதுடெல்லித் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். கிரண் பேடி, கிழக்குத் டெல்லியிலிருக்கும் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
 
அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியபோது, கிரண் பேடியும் அரவிந்த் கேஜரிவாலும் இணைந்து அந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக இருவரும் எதிரெதிராகச் செயல்பட்டுவருகின்றனர்.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்கவில்லை என்றாலும் கடந்த சில வாரங்களாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளார். டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பாஜகவுக்கு இது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூடுதல் எண்ணிக்கையில் இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால், இரண்டாவதாக வந்த ஆம் ஆத்மி கட்சி, காங்கிரசுடன் சேர்த்து கூட்டணி அரசமைத்தது.
 
49 நாட்கள் பதவியிலிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் எதிர்ப்பு மசோதா ஒன்றை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு வந்ததையடுத்து, பிப்ரவரி 14ஆம் தேதி ராஜினாமா செய்தார். அந்த மசோதாவின்படி, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்படும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தன்னிச்சையான அமைப்பு விசாரிக்கும்.
 
பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கிரண் பேடி, நல்லாட்சி தருவதாகவும் டெல்லியை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்றப்போவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.